ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவால், தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.736 உயர்ந்தது.
சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.2,827 ஆகவும், ஒரு பவுன் விலை ரூ.22,616 ஆகவும் இருந்தது. இது நேற்று காலை கிராமுக்கு ரூ.138 என பவுனுக்கு ரூ.1,104 உயர்ந்தது. இதனால் ஒரு கிராம் ரூ.2,965-க்கும், பவுன் ரூ.23,720-க்கு விற்கப்பட்டது.
தங்கம் விலையில் நேற்று மாலை சிறிய அளவில் மாற்றம் ஏற்பட்டு, கிராம் விலை ரூ.2,919, பவுன் விலை ரூ.23,352 என்ற அளவில் விற்கப்பட்டது. அதாவது, ஒரே நாளில் பவுன் விலை ரூ.736 என்ற அளவில் உயர்ந்தது. கடந்த ஜூன் மாதத் தில் ஒரு பவுன் ரூ.23,352க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் ‘தி இந்து’விடம் கூறியபோது, ‘‘சர்வதேச அள வில் தற்போதைய பொருளா தார சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மற்ற துறை யைவிட தங்க முதலீடு பாதுகாப் பானது என்பதால், தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.
உள்ளூரில் தேவையும் அதிகரித்து வருகிறது. டால ருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் குறைந்து வருகிறது. இது போன்ற காரணங்களாக தங்கம் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வந்தது.
இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவால் சர்வதேச பங்குச் சந்தை யில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், தங்கம் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 2 ஆண்டு களுக்கு பிறகு நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,104 உயர்ந்து, மாலையில் சற்று குறைந்தது. விலை உயர்வு அடுத்த சில நாட் களுக்கு நீடிக்கலாம்’’ என்றார்.