தமிழகம்

ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து ரயில்வே அமைச்சகத்துடன் 21-ம் தேதி பேச்சுவார்த்தை: எஸ்ஆர்எம்யூ கண்ணையா தகவல்

செய்திப்பிரிவு

ரயில்வே ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து ரயில்வே அமைச்சகத்துடன் வரும் 21-ம் தேதி பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாக எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலாளர் என்.கண்ணையா கூறினார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிப்பது, புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, காலிப் பணியிடங்கள் நிரப்புதல் உட்பட 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11-ம் தேதி காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதாக ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. இப்போராட் டம் 4 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னையில் செய்தி யாளர்களிடம் எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலாளர் என்.கண் ணையா நேற்று கூறியதாவது:

ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்களின் 7-வது ஊதிய உயர்வு பரிந்துரைகளில் எங்கள் முக்கிய கோரிக்கைகள் இடம்பெறாததை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்தினோம். இதற்கிடையே, மத்திய அமைச்சர்கள் 6 பேர் கொண்ட குழுவினருடன் தேசிய போராட்டக் குழு நிர்வாகிகள் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ‘மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்படும். சம்பள விகிதங்கள், சம்பள நிர்ணய முறையில் மாற்றங்கள் ஏற்படுத்த கமிட்டி அமைக்கப்படும். புதிய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட இதர கோரிக்கைககள் குறித்து ஆராய தனித் தனியாக குழு அமைக்கப்படும்’ என உறுதியளிக்கப்பட்டதால், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை 4 மாதங்களுக்கு தள்ளிவைத்துள்ளோம்.

ரயில்வே ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் குறித்து ரயில்வே அமைச்சகத்துடன் டெல்லியில் வரும் 21-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இதில், அகில இந்திய ரயில்வே ஊழியர்கள் சம்மேளனம் (ஏஐஆர்எப்) பொதுச் செயலாளர் ஜி.எஸ்.மிஸ்ரா, எஸ்ஆர்எம்யூ சார்பில் நான் கலந்துகொள்கிறேன்.

SCROLL FOR NEXT