தேசத் துரோக வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக் கல் செய்த மனு மீதான விசாரணை வரும் ஜூலை 10-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், 'நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற புத்தகத்தை வைகோ வெளியிட்டார்.
அப்போது அவர், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக ஆயிரம் விளக்கு போலீஸார் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் தானாக முன்வந்து நீதிமன்றத்தில் ஆஜராகி சிறைக்குச் சென்ற வைகோ, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். தற்போது இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கோகிலா முன்பு நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி வைகோ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘‘இந்த வழக்கிலிருந்து என்னை விடு விக்க வேண்டும். இந்த வழக்குத் தொடர எந்த முகாந்திரமும் இல்லை. இதுபோன்ற வழக்குகளில் வெறும் பேச்சு மட்டுமே குற்றமாகாது. அந்த பேச்சினால் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் மட்டுமே அது குற்றமாகும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நான் பேசியதை மறுக்கவில்லை. ஆனால் அந்தப் பேச்சு தேசிய பாதுகாப்புக்கு எதிரானது அல்ல. இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது தொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்கவேண்டும்’’ இவ்வாறு மனுவில் வைகோ கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி கோகிலா வரும் ஜூலை 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.