தமிழகம்

குடிநீர் விழிப்புணர்வு வாரம்: தமிழகம் முழுவதும் நீராதாரங்களின் குடிநீர் தரம் ஆய்வு செய்யப்படும் - ஜூலை 1-ல் தொடங்குவதாக அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் அனைத்து நீராதாரங்களின் நீர் மாதிரிகள் ஜூலை 1 முதல் 3-ம் தேதி வரை சேகரிக்கப்பட்டு, நீரின் தர விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

தேசிய ஊரக குடிநீ்ர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரம் நேற்று தொடங்கியது. இதையொட்டி, வரும் ஜூலை 3-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு கிடைப் பதை உறுதி செய்யும் வகையில், கடந்த 2013-ல், தமிழக அரசு பாதுகாப்பான குடிநீர் பற்றிய ஒரு வாரகால விழி்ப்புணர்வு முகாமுக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து கடந்த 2014 பிப்ரவரி 19-ம் தேதி குடிநீர் பாதுகாப்பு வாரத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

குடிநீர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, 14 ஆயிரத்து 524 இலவச நீர் தர பரிசோதனைப் பெட்டிகள் அனைத்து ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு வழங்கப்பட்டன. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணிகள் நடத்தப்பட்டன. 5 லட்சத்து 32 ஆயிரத்து 325 நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு. நீர் தர விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டன.

இந்த முகாமின் வெற்றியை தொடர்ந்து, தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரம் அனுசரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த விழிப்புணர்வு வாரத்தை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

கடந்த 2015-16ம் ஆண்டுக்கான விழிப்புணர்வு வார முகாம், நேற்று தொடங்கியது. வரும் ஜூலை 3-ம் தேதி வரை இந்த முகாம் நடத்தப்படுகிறது. முதல் நாளான நேற்று, குடிநீர் வடிகால் வாரியம் தயாரித்த குடிநீர் பரிசோதனை பெட்டிகள், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களுக்கு வழங்கினார்.

இது குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:

தமிழகத்தில், 28-ம் தேதி 31 மாவட்டங்களில் பேரணிகள், 29-ம் தேதி 385 தொகுதி வாரி பேரணிகள், 30-ம் தேதி 12 ஆயிரத்து 524 பஞ்சாயத்து அளவிலான விழிப்புணர்வு கூட்டமும் நடத்தப்படும். தமிழகத்தில் அனைத்து மக்களும் தாங்கள் பருகும் குடிநீரின் தரத்தை அறிந்து கொள்ள வேண்டும். இதற்காக, ஜூலை 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை அனைத்து நீராதாரங்களின் நீர் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றை பரிசோதித்து நீரின் தரம் இணையதளத்தில் பதிவு செய்யப்படும், நீர் மாதிரிகள் சேகரிக்க குழாய் ஆபரேட்டர்கள், சுய உதவிக்குழுக்கள், அங்கன் வாடி ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பரி சோதிக்க ஆசிரியர்கள், சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT