தமிழகத்தில் அடுத்த மாதம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நரேந்திர மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, கடந்த மூன்று மாதங்களாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார். கடந்த செப்டம்பரில் திருச்சியில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பின், அக்டோ பரில் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடந்த நானி பல்கிவாலா நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிலையில், மீண்டும் தமிழகத்துக்கு வர வேண்டும் என மோடிக்கு மாநில பா.ஜ.க. சார்பில் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. வட மாநிலங்களில் முதல்கட்ட சுற்றுப்பயணம் முடிந்ததும், ஜனவரியில் அவர் தமிழகம் வரலாம் என பா.ஜ.க.வினர் எதிர்பார்த்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகச் செய்தித் தொடர்பாளர் சர்வோத்தமனிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை மற்றும் மதுரையில் நரேந்திர மோடி பங்கேற்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களை நடத்த கட்சியின் தலைமை நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்’’ என கூறினார்.