தமிழகம்

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம்: மனிதநேயத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி - மு.க.ஸ்டாலின், ஜி.கே.வாசன் பெருமிதம்

செய்திப்பிரிவு

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவது மனித நேயத்துக்கு உலக அரங்கில் கிடைத்த மாபெரும் வெற்றி என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள் ளதாவது:

உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவின் பொது சேவைக்கு ஈடு இணை கிடையாது. அவரது அற்புதங்களை அங்கீகரிக்கும் விதமாக அவரை புனிதர் பட்டம் பெற்றவராக போப் ஆண்டவர் அறிவித்துள்ளார். அன்னை தெரசாவுக்கு 1962-ல் பத்மஸ்ரீ விருது கிடைத்தது. அவருக்கு பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது. ஏழைகளின் மேம்பாட்டுக்காகவும், அவர்களது முன்னேற்றத்துக்காகவும் வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்தவர் அன்னை தெரசா. தொண்டு செய்வதையே வாழ்க்கையாக்கிக் கொண்ட அவர்.

அன்னை தெரசாவின் நூற்றாண்டு விழாவினை சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கத்தில் 4.12.2010 அன்று திமுக அரசு சிறப்போடு நடத்தியது. ஆதரவற்ற மகளிருக்கான திருமண உதவித் திட்டத்துக்கு ‘அன்னை தெரசா’ என்று திமுக ஆட்சியில் பெயர் சூட்டப்பட்டது. மேலும், வள்ளுவர் கோட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்திட ரூ.15 கோடியே 30 லட்சம் செலவில் “வணிக வளாகம்” அமைத்து, அதற்கு “அன்னை தெரசா மகளிர் வணிக வளாகம்” என்ற பெயரை முதல்வராக இருந்த போது கருணாநிதி சூட்டினார்.

அன்னை தெரசாவுக்கு வழங்கப்படும் இந்த புனிதர் பட்டம் என்ற கவுரவம் உலக அரங்கில் மனித நேயத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. அன்னை தெரசாவின் நினைவைப் போற்றும் இந்த அரிய தினத்தில் பொதுத் தொண்டாற்றுவோம் என்ற உறுதிமொழியை நாம் அனைவரும் எடுத்துக் கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை யில், ‘இளம் வயது முதலே ஏழை, எளிய மக்களுக்கு சேவை மனப்பான்மையோடு தொண்டு செய்து உதவி புரிந்து வந்த அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவது பாரத நாட்டுக்கு கிடைத்த பெருமையா கும். இது அவரது புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும். அன்னை தெரசாவின் வழிநின்று அனைவரும், ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் செய்திட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT