வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்துடன், குறிக்கோளுடன், இலக்குடன் தொண்டர்களின் களப் பணி அமைய வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார்.
அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.சண்முகநாதன், செந்தூர் பாண்டியன், புதுச்சேரி எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் ஆகிய 4 பேர் இல்ல திருமணங்கள் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடந்தது. முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கி 4 ஜோடி மணமக்களுக்கும் திருமணங்களை நடத்தி வைத்தார்.
விழாவில் பேசிய முதல்வர், முதலில் மணமக்களை வாழ்த்தினார். பின்னர், “வாழ்க்கையில் மிகவும் உயரிய லட்சியம் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த லட்சியத்திற்காகவே உங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்யுங்கள். அந்த லட்சியத்தின் நினைவாகவே வாழுங்கள்.
எந்நேரமும் அந்த லட்சியத்தைப் பற்றிக் கனவும் காணுங்கள். அந்த லட்சியத்திற்காக அனைத் தையும் தியாகம் செய்யுங்கள். அந்த லட்சியத்தால் நிறைந்திருங்கள். அந்த லட்சியத்திற்காகவே செயலாற்றுங்கள். உங்களுக்கு வெற்றி நிச்சயம்” என்றார் சுவாமி விவேகானந்தர்.
சுவாமி விவேகானந்தரின் இந்த லட்சியத்தை, கழக உடன்பிறப்புகள் கடைபிடிக்க வேண்டும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்துடன், குறிக்கோளுடன், இலக்குடன் தொண்டர்களின் களப் பணி அமைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், "நாளைய பாரதம் நம் கையில்” என்றார்.