தமிழகம்

சின்னமலை – விமான நிலையம் இடையே: ரயில்சேவை தொடக்க தேதி ஓரிரு நாளில் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சின்னமலை – விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில்சேவை தொடங்குவதற்கான தேதி ஓரிரு நாளில் வெளியாகும் என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இரண்டாவது வழித்தடத்தில் ஆலந்தூரில் இருந்து கோயம்பேட்டுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, சின்னமலை - ஆலந்தூர் பரங்கிமலை விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான இறுதிகட்ட சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.

கடந்த ஜூலை 27-ம் தேதி சென்னைக்கு வந்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.நாயக் தலைமையிலான குழுவினர் சின்னமலையில் இருந்து விமானம் நிலையம் வரை மொத்தம் 9 கி.மீ தூரத்துக்கு, இன்ஜின் மற்றும் பாதையை ஆய்வு செய்யும் ரயில் டிராலி மூலம் ஆய்வு நடத்தினர். விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர், கிண்டி, சின்னமலை ஆகிய இடங்களில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து, சின்னமலை - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான ஒப்புதலை ரயில்வே பாதுகாப்பு ஆணையரகம் கடந்த மாதம் 4-ம் தேதி அளித்தது. பின்னர், தமிழக அரசுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘சென்னையில் சின்னமலை - ஆலந்தூர் - விமான நிலையம் இடையே உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்க ஒட்டுமொத்த பணிகளும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கிறது. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில்சேவை தொடங்க ஆணையரகம் கடந்த மாதமே ஒப்புதலை அளித்துள்ளது. மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான தேதியை தமிழக அரசு ஓரிரு நாளில் அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT