தமிழகம்

சின்னமனூர் அருகே ஜல்லிக்கட்டு காளை சாவு: கண்ணீர் மல்க நல்லடக்கம்

ஆர்.செளந்தர்

சின்னமனூர் அருகே யாரும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளை நேற்றுமுன்தினம் திடீர் என இறந்தது. ஊர் மக்கள் கண்ணீர் மல்க அதை நல்லடக்கம் செய்தனர்.

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே அய்யம்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஜல்லிக்கட்டு மீதான தடை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இந்த வீரவிளையாட்டு நடைபெறவில்லை.

இந் நிலையில், இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில் என்பவர் தனது வீட்டில் அய்யனார் என்ற காளையை வளர்த்து வந்தார். இக்காளை நேற்றுமுன்தினம் திடீர் என இறந்தது. இதையடுத்து கிராமமே சோகத்தில் மூழ்கியது. கிராம மக்கள் கண்ணீர் மல்க காளையை நல்லடக்கம் செய்தனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் காளை உரிமையாளர் செந்தில் கூறியதாவது:

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு புத்தம்பட்டி கிராமத்தில் இருந்து காளை கன்று வாங்கி அதற்கு அய்யனார் என பெயர் சூட்டி எங்கள் குடும்பத்தில் மூத்த பிள்ளை போல் பாவித்து ஆசையாக வளர்த்து வந்தோம். தேனி மாவட்டத்திலேயே எங்கள் ஊரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பெயர் போனது. இங்கு நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல் எனப் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்வர். நாங்கள் வளர்க்கும் காளைகளை உள்ளூர் மாடுபிடி வீரர்கள் அணைக்க (பிடிக்க) கூடாது என ஊர் கட்டுப்பாடு உள்ளது. இதனால் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் போட்டியில் கலந்து கொள்வர். வாடிவாசல் வழியாக முதல் காளையாக கோயில் காளை அவிழ்த்து விடப்படும். அதன் பின்னர் எனது அய்யனார் காளை அவிழ்த்து விடப்படும். இது தவ்வி துள்ளிச் செல்லும் அழகைக் கண்டு நாங்கள் வியந்துள்ளோம்.

இதுவரை எனது காளையை யாரும் அடக்கியதில்லை. மாடுபிடி வீரர்கள் தோல்வியை தான் தழுவியுள்ளனர். இந்த ஆண்டு போட்டி நடைபெறும்போது எனது காளையை களத்தில் இறக்குவதற்காக அதற்கு நீச்சல், ஓட்டம், மணல்மேட்டில் குத்தல் என பல்வேறு பயிற்சி அளித்து வந்தேன்.

ஆனால் தோட்டத்தில் கட்டி வைத்திருந்த காளை திடீர் என உயிரிழந்தது. எனது குடும்பத்தில் ஒருத்தரை இழந்தது போல் மனவேதனையாக உள்ளது என்றார்.

மாடுபிடி வீரர்கள் மருதுபாண்டி, சந்தனகுமார், சின்னபாண்டி, சரவணன் ஆகியோர் கூறுகையில், வெளிமாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு சைக்கிள், அண்டா, குத்துவிளக்கு எனப் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளோம். யாரிடமும் பிடிபடாத எங்கள் ஊர் அய்யனார் காளை இறந்தது எங்களுக்கு அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

இறந்த காளையை குளிப்பாட்டி, சந்தனம், பொட்டு, மாலை அணிவித்து மனிதர்களை போல் அனைத்து இறுதி சடங்குகளும் நடத்தி கண்ணீர் மல்க அதை கோயில் அருகிலேயே புதைத்து விட்டோம். இதனால் எங்கள் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது என்றனர்.

SCROLL FOR NEXT