தமிழகம்

கோவை பெண் பொறியாளர் அகிலா தற்கொலை வழக்கில் இன்ஸ்பெக்டருக்கு 10 ஆண்டு சிறை: தஞ்சாவூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

கோவையைச் சேர்ந்த பெண் பொறி யாளர் அகிலாண்டேஸ்வரியை தற்கொலைக்குத் தூண்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், காவல் ஆய்வாளர் சேதுமணி மாதவனுக்கு, 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தஞ்சாவூர் மகளிர் விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

கோவை வடவள்ளி சி.எஸ். நகரைச் சேர்ந்த வீராயி வல்லத்தரசு- ராணி தம்பதியரின் மகள் அகிலா (எ) அகிலாண்டேஸ்வரி(32). பொறி யாளரான இவர், சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் மனிதவளப் பிரிவில் வேலை பார்த்து வந்தார். பல்வேறு நிறுவனங்களுக்காக ஆள்தேர்வும் செய்து வந்துள்ளார். அப்போது, சிலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தரவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து, கடந்த 2007-ல் தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண் காணிப்பாளரிடம் கார்த்திக் என்பவர் புகார் அளித்தார். அதன்பேரில், தஞ்சாவூரைச் சேர்ந்த ஜானகிராமன், இளையராஜா, கோவையைச் சேர்ந்த அகிலாண்டேஸ்வரி ஆகி யோர் மீது தஞ்சாவூர் மருத் துவக் கல்லூரி காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சேதுமணி மாதவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

விசாரணைக்காக திருச்சி வந்த அகிலாவை, கடந்த 16.11.07 அன்று ஆய்வாளர் சேதுமணிமாதவன், போலீஸ் வாகனத்தில் அழைத்து வந்து, தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையம் எதிரில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்ததாகவும், அந்த அறைக்கு அவர் அடிக்கடி சென்று வந்ததாகவும் கூறப்படு கிறது.

இந்த நிலையில், 19.11.2007 அன்று இரவு, விடுதி அறையில் அகிலா தூக்கில் சடலமாக தொங்கி னார். அவரது சாவுக்கு ஆய்வாளர் சேதுமணிமாதவன் உள்ளிட்ட சிலர் காரணம் என புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கும், டிஎஸ்பி விசார ணைக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதற்கிடையில், தனது தாய்க்கு அகிலா இறுதியாக எழுதிய கடி தத்தில் தனது சாவுக்கான கார ணங்களையும், சேதுமணிமாதவன் உள்ளிட்டோரின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

இதையடுத்து, சேதுமணிமாத வன், அவருக்கு உதவியாக இருந் ததாக தஞ்சாவூர் அரசு வாகனப் பணிமனை முன்னாள் பணியாள ரான பாலு (எ) பாலசுப்பிரமணியன், தலைமைக் காவலர் கணேசன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மூவரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், இந்த வழக்கு 2008-ல் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப் பட்டது. பணியிடை நீக்கம் செய்யப் பட்டிருந்த சேதுமணிமாதவன், மீண்டும் பணியில் சேர்ந்து, தற் போது மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். பாலு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந் தார்.

மொத்தம் 22 ஆண்டு சிறை

தஞ்சாவூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணஜெய ஆனந்த், நேற்று மாலை தீர்ப்பளித்தார். அதில், 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்), 354 (பாலியல் பலாத்காரம் செய்தல்), 4 (பி) (தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம்) ஆகிய 3 குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை அளித்த நீதிபதி, 120 (பி) - (கூட்டுச் சதி)-க்கு 10 ஆண்டுகள் கடுங்காவல், 409 (அரசு ஊழியர் நம்பிக்கை துரோகம் செய்தல்)-க்கு 10 ஆண்டுகள் கடுங்காவல், 343 (சட்டத்துக்குப் புறம்பாக அடைத்து வைத்தல்)- க்கு 2 ஆண்டுகள் சாதாரண சிறை தண்டனையும் விதித்ததுடன், இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட் டார்.

கணேசன் விடுதலை செய்யப்பட்டார். பாலு இறந்து விட்டதால் அவரும் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

பரபரப்பாக பேசப்பட்ட வழக்கு

உயிரிழந்த அகிலா, புதுக்கோட்டை முன்னாள் எம்பி முத்துச்சாமி வல்லத்தரசின் மகன் வழிப் பேத்தி என்பதால், அப்போது இந்த வழக்கு தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது, திருச்சி மத்திய மண்டல காவல்துறை அதிகாரியின் சிறப்புக் குற்றத் தடுப்பு (என்கவுன்ட்டர்) பிரிவில் முதன்மை இடத்தில் சேதுமணிமாதவன் இருந்ததால், அவரைக் காப்பாற்ற முயற்சி நடப்பதாகக் கூறப்பட்டது.

இச்சம்பவத்தைக் கண்டித்து, இந்திய மாதர் தேசிய சம்மேளனம், மகஇக, மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து ‘கோவை அகிலா காவல் கொலைக்கு நீதி கோரும் கூட்டமைப்பு’ நிறுவப்பட்டு, தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்தே, காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT