தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர் களுக்கு தனியாக கழிப்பறை கட்டித் தரக்கோரி தொடரப்பட்ட வழக்கில், சர்வதேச நாடுகளில் என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப தமிழகத்திலும் நடவ டிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பொது இடங்களில் மூன்றாம் பாலினத்தவருக்கு தனி கழிப்பறை அமைத்து தரக்கோரி சென்னை செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தி ருந்தார். அதில், ‘‘தமிழகம் முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனி கழிப்பறைகள் உள்ளன. தியேட்டர், ஹோட்டல், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் உள்ள கழிப்பறைகளை மூன்றாம் பாலினத்தவர்கள் பயன் படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. பெண்களின் கழிப்பறைக்குள் சென் றால் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்படுகிறது. ஆண்களின் கழிப் பறை களுக்குள்ளும் செல்ல முடியவில்லை. எனவே, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஏற்படும் தர்ம சங்கடத்தைப் போக்க தனியாக கழிப்பறை கட்டித்தர உத்தரவிடக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனியாக கழிப்பறை கட்டித்தர உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நடந்தது. அப்போது அரசு தரப்பில், ‘‘இதுதொடர்பாக சமூக நலத்துறை இயக்குநரின் கருத்தை கோரியுள்ளதாகவும் எனவே இந்த மனுவிற்கு பதிலளிக்க 2 மாதம் அவகாசம் வழங்க வேண்டும்’’ என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் 3-க்கு தள்ளி வைத்த நீதிபதிகள், ‘‘ மிக முக்கியமான இந்த பிரச்சினை யில் பிற நாடுகள் மற்றும் சர்வதேச அளவில் என்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது? என்பது குறித்தும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது குறித்தும் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்திற்கு உதவ வழக்கறிஞர் தேவ பிரசாத் என்பவரையும் நீதிபதிகள் நியமித்தனர்.