தமிழகம்

சூழலியல் பார்வை: அரசு நிர்வாக குறைகளால் பேரழிவு ஆனது எண்ணூர் எண்ணெய்க் கசிவு விபத்து

பாரதி ஆனந்த்

சூழலியல் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன் நேர்காணல்

"எண்ணூரில் 28-ம் தேதி நிகழ்ந்த விபத்து ஒரு சுற்றுச்சூழல் பேரழிவு. ஆனால், அதைவிட மோசமான பேரழிவு, இந்த விபத்தை அரசு நிர்வாகத்தினர் கையாண்ட முறையும் நிர்வாகக் குறைபாடுகளுமே" என்கிறார் சூழலியல் செயல்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன்.

எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த 28-ம் தேதி எம்.டி.பி.டபிள்யூ. மேப்பிள், எம்.டி. டான் காஞ்சிபுரம் ஆகிய இரண்டு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், எம்.டி. டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது.

கடல் நீரில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் இந்தியக் கடலோரக் காவல் படையினர், கடலோர காவல் படையின் மாசு அகற்றும் குழுவினர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், எண்ணூர் துறைமுகம், உள்ளூர் மீனவர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் தற்போது தன்னார்வ இளைஞர்களுடன் இணைந்துள்ளனர்.

விபத்து நடந்து ஆறு நாட்கள் ஆகியும், கடந்த இரண்டு நாட்களாகத்தான் தூய்மைப் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. இது குறித்து சூழலியல் செயல்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன் பகிர்ந்துகொண்டது:

மூடி மறைக்க முயற்சி

"எண்ணூரில் 28-ம் தேதி நிகழ்ந்த விபத்து ஒரு சுற்றுச்சூழல் பேரழிவு. ஆனால், அதைவிட மோசமான பேரழிவு, இந்த விபத்தை அரசு நிர்வாகத்தினர் கையாண்ட முறையும் நிர்வாகக் குறைபாடுகளுமே.

விபத்து நடந்த நாளன்றே கடலோர காவல் படையினர் தூய்மைப் பணிக்கு ஆயத்தமாகினர். ஆனால், காமராஜர் துறைமுகம் அவர்களுக்கு போதிய தகவல்களை அளிக்கவில்லை. விபத்தின் தாக்கம் எத்தகையது என்ற விவரத்தை மூடி மறைப்பதில்தான் துறைமுகம் கவனம் செலுத்திக்கொண்டிருந்தது. இப்படி பிரச்சினையை மூடி மறைக்க நினைத்தது மிகப்பெரிய தவறு. இந்தத் தவறின் விளைவாக இன்றைக்கு கடல்வாழ் உயிரினங்களும், கடல் வளமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தவறுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

புற்றுநோய் காரணிகள்

கடலில் கலந்திருப்பது கச்சா எண்ணெய். இதன் தாக்கம் நிச்சயம் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். கடலில் படர்ந்துள்ள கச்சா எண்ணெய்ப் படலம் மிகவும் அடர்த்தியானது. இதனால் கடலுக்குள் சூரிய ஒளி புகாது. கடல் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை தடைபடும். மீன்களின் செதில்களுக்குள் கச்சா எண்ணெய் புகுவதற்கான வாய்ப்பு அதிகம். அது மட்டுமல்லாமல் இந்தப் படிவம் கடல் மட்டத்துக்கு காற்றுக்கும் இடையிலான ஆக்சிஜன் பரிமாற்றத்தைத் தடுத்துவிடும்.

அது மட்டுமல்லாமல் இந்தப் பேரழிவு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். கச்சா எண்ணெய் கசிவால் கடல் நீரில் கலந்த பாலிசைக்ளிக் அரோமேட்டிக் ஹைட்ரோ கார்பன்ஸ் (Polycyclic aromatic hydrocarbons - PAHs) ஆண்டுகள் பல கடந்தாலும், அப்படியே தங்கி இருக்கும். இதில் புற்றுநோயை விளைவிக்கும் காரணிகளும் இருக்கின்றன. கடற்கரை மணலில் கலக்கும் எண்ணெய்க் கழிவு காலப்போக்கில் புது மணலால் மூடப்படலாம். ஆனாலும் பாதிப்பு முழுமையாக அகன்றுவிட்டதாகக் கூற முடியாது.

யாருடைய பொறுப்பு?

இப்படி ஒரு தீராத பேரழிவைத் தடுக்க, விபத்து நடைபெற்ற அன்றே கப்பலை தனியாக ஓரிடத்துக்கு இழுத்துச் சென்று தாக்கத்தை கட்டுப்படுத்தியிருக்க வேண்டிய துறைமுக நிர்வாகம், வாய்மூடி மவுனியாக இருக்கிறது.

இப்போது மாவட்ட நிர்வாகமும், கடலோரக் காவல் படையும், தன்னார்வலர்களும் சேர்ந்து எண்ணெய் படலக் கழிவை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால், கடலிலும், கடற்கரை மணலிலும் படிந்த எண்ணெய் கழிவை முழுமையாக தூய்மைப்படுத்திவிட முடியாது என்பதே உண்மை. இந்தத் தவறுக்கு காமராஜர் துறைமுகம் பொறுப்பேற்க வேண்டும்.

தயாரிப்பு இல்லை

இப்படி ஒரு விபத்து நடந்திருக்கும் நிலையில் இதுவரை சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போலீஸ் புகார் பதிவு செய்யப்படவில்லை. விசாரணை இல்லை. விபத்து ஏற்படுத்திய கப்பல் நிறுவனங்களிடமிருந்தும் எவ்வித பதிலும் இல்லை. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமோ, ரப்பர் ஸ்டாம்ப் போல் செயல்படுகிறது.

மிகப் பெரிய துறைமுகம், அதிக வர்த்தகம் செய்யும் துறைமுகம் என்றெல்லாம் மார்தட்டிக் கொள்பவர்கள், இதுபோன்ற விபத்துகளை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்க வேண்டுமில்லையா. முறையான தகவலை தகுந்த நேரத்தில் கடலோர காவல் படையினருக்குக் கொடுத்திருந்தால் பாதிப்பை ஓரளவுக்கு குறைத்திருக்கலாம்.

என்ன மாற்றம் தேவை?

இன்று இரு மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. சாதாரண மக்களுடைய வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுவது குறித்து அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லாததையே இந்தப் பேரழிவு வெளிப்படுத்துகிறது.

வார்தா புயல், மெரினா போராட்டத்துக்கு பிந்தைய போலீஸ் நடவடிக்கையால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த எண்ணெய்க் கசிவு இன்னுமொரு இடி. மீனவர்களுக்குத் தொடர்ந்து நிவாரணமும், நிதியுதவியும் செய்வதில் அக்கறை காட்டுவது புத்திசாலித்தனமா அல்லது தவறுகள் நடைபெறாத வகையில் முன்கூட்டியே தடுப்பது சிறந்த நிர்வாகமா என்பதைப் புரிந்துகொண்டு அரசு செயல்பட வேண்டும்.

இவ்வாறான விபத்துகளை எதிர்கொள்வது சார்ந்து தொழில்நுட்பத் தயாரிப்பு இல்லை என்றால், பெரும் வருமானம் ஈட்டும் துறைமுகமோ, அரசோ வெளிநாட்டில் இருந்து அந்தத் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்து கொள்ளலாமே. ஆனால், இங்கே நம் அரசிடம் இருப்பது நேர்மை பற்றாக்குறை... அதை எங்கிருந்தும் இறக்குமதி செய்ய முடியாது. அது ஒரு பண்பாடாக நம்மிடம் கலந்திருக்க வேண்டும்.

தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in.

SCROLL FOR NEXT