மாநகராட்சி மேயரை கவுன்சிலர்களே தேர்வு செய்யும் முறை குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும் என்று அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர்.
மாநகராட்சி மேயர்களை மக்கள் தேர்வு செய்வதற்கு பதிலாக, கவுன்சிலர்களே நேரடியாக தேர்வு செய்யலாம் என்ற சட்டத் திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பபட்டது. இதற்கு சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டப்பேரவைக்கு வெளியேயும் இந்த மசோதாவுக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக தலைவர்கள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்) :
இந்த புதிய முறை ஊழலுக்கு வழி வகுக்கும். அதிமுக தோல்வி பயத்தில் இது போன்ற மாற்றங்களில் ஈடுபட்டு வருகிறது.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்):
மேயர்களை கவுன்சிலர்களே தேர்வு செய்வது ஏற்புடையதல்ல. மேயரை கவுன்சிலர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று சொல்வதால் சிக்கல்கள் உருவாகும். கவுன்சிலர்களிடம் பேரம் பேசி மாற்றி வாக்களிக்க சொல்வது, கவுன்சிலர்களை கடத்துவது போன்ற செயல்கள் அரங்கேறக்கூடும்.
திருமாவளவன் (விசிக தலைவர்):
தமிழக அரசின் இந்த புதிய சட்டத் திருத்தம் மூலம் கவுன்சிலர்கள் பேரத்துக்கு வாங்கப்படுவார்கள். இது ஊழலுக்கு வழி வகுக்கும். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருப்பது வரும் தேர்தலை கருத்தில்கொண்டு அறிவிக்கப்பட்ட கவர்ச்சிகரமான ஒன்று.
தமிழிசை சவுந்தரராஜன் (பாஜக):
மேயர் தேர்தலில் புதிய முறை வேண்டாம். இந்த முறையால் ஊழலுக்கு வழி வகுக்கும். ஜனநாயக உரிமையை பாதிக்கும். எனவே பழைய முறையே நீடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.