தமிழகம்

விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 பேர் பலி

இ.மணிகண்டன்

விருதுநகரில் பட்டாசு ஆலையில் இன்று (சனிக்கிழமை) காலை நடந்த வெடிவிபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வெற்றிலையூரணி எனும் இடத்தில் சக்தி சண்முகம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இருக்கிறது. இந்த ஆலை, உரிய உரிமம் பெற்றே நடத்தப்பட்டு வருகிறது. ஆலையில் 15 அறைகள் இருக்கின்றன.

இன்று காலை, ஆலைக்கு வழக்கம்போல் பணியாளர்கள் வந்தனர். அப்போது, ஒரு அறையில் மருந்து கலவை தயாரிக்கப்பட்டுவந்தது. அப்போது திடீரென மருந்து கலவையில் உராய்வு ஏற்பட்டதால் அந்த அறை வெடித்துச் சிதறியது. அடுத்தடுத்து 3 அறைகள் வெடித்துச் சிதறின.

இந்த விபத்தில் பவுல்ராஜ் (45), விஜயா (35), சண்முகவேல் (40), கலாராணி (38), முருகேஸ்வரி (21) ஆகிய 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் வெற்றிலையூரணியைச் சேர்ந்த பவுல்ராஜ் என்பவர் அதிமுக கிளைச் செயலாளராக இருந்தார். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஐந்து பேரது சடலமும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

விபத்தில், பார்வதி (40), இளவரசி (18), சுந்தர மூர்த்தி (36), அனந்தவேல் (55) ஆகியோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT