தமிழகம்

மக்கள் நீதிமன்றங்கள் நடைபெறுவது 2 மாதத்துக்கு ஒரு முறையாக குறைப்பு

கி.மகாராஜன்

இந்தியாவில் உயர் நீதிமன்றங் கள் உட்பட அனைத்து நீதிமன் றங்களிலும், மாதம் ஒருமுறை நடைபெற்று வந்த மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்), 2 மாதங்களுக்கு ஒருமுறையாகக் குறைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதைத் தடுக்கவும், இரு தரப்பினரிடமும் சமரசம் ஏற்படுத்தி பிரச்சினைக்கு தீர்வு காணவும் மாற்று தீர்வு முறைகளில் ஒன்றான லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம் தொடங்கப்பட்டது. மனுதாரர்களின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தன்னிச்சையாகவோ மக்கள் நீதிமன்றங்களுக்கு வழக்குகள் அனுப்பப்படுகின்றன.

தமிழகத்தில் 1986 முதல் 31.1.2017 வரை 31 ஆண்டுகளில் 80,953 மக்கள் நீதிமன்றங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 79.08 லட்சம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கு ரூ.12,660 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. கடந்த 2013 நவம்பர் மாதம், இந்தியா முழுவதும் அனைத்து உயர் நீதிமன்றங்கள், மாவட்டம், தாலுகா அளவிலான நீதிமன்றங்களில் மெகா மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அன்று மட்டும், நாடு முழுவதும் 35 லட்சம் வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டன.

ஆர்வம் குறைவு

இந்திய நீதிமன்றங்களில், கடந்த ஆண்டு வரை டிசம்பர் மாதம் மெகா மக்கள் நீதிமன்றம், மாதந்தோறும் ஒரு தேசிய மக்கள் நீதிமன்றம் என விடுமுறை காலம் தவிர்த்து, ஓர் ஆண்டில் 10 மக்கள் நீதிமன்றங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், தேசிய மக்கள் நீதிமன்றத்தின் எண்ணிக்கை திடீரென குறைக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அடுத்து ஏப்ரல் 8-ம் தேதி நடைபெற உள்ளது.

பணியாளர் பற்றாக்குறை

தேசிய மக்கள் நீதிமன்றத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதற்கு, இதனை நடத்தும் இலவச சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் பணியாளர்கள் குறைவாக இருப்பது, கணக்கு காட்டுவதற்காக அபராதம் மட்டுமே கட்ட வேண்டிய வழக்குகளை மக்கள் நீதிமன்றத்தில் பட்டியலிட்டு முடிப்பது, வழக்கறிஞர்களிடம் ஆர்வம் குறைந்தது உட்பட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

கடந்த சில மாதங்களாக மக்கள் நீதிமன்றத்தில் விசார ணைக்கு பட்டியலிடும் வழக்கு களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோதிலும், முடிவுக்கு வரும் வழக்குகள் குறைவான அளவில் தான் உள்ளன. பல வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் முடியாமல் மீண்டும் நீதிமன்றத்துக்கு அனுப்பப்படுகின்றன. உடன்பாடு காணப்பட்ட வழக்குகள்கூட, மக்கள் நீதிமன்றத்தில் முடியாமல் மீண்டும் நீதிமன்றத்துக்கு அனுப்பப்படும் நிலை உள்ளது.

இதுகுறித்து வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியன், கூறும் போது, “சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் ஊழியர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் 70 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மக்கள் நீதிமன்றம் நடத்துவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. வழக்கறிஞர் களிடம் ஆர்வம் குறையவில்லை” என்றார்.

மேல்முறையீடு செய்ய முடியாது

குஜராத் மாநிலம் ஜூனகாரில் மக்கள் நீதிமன்றம் முதன்முதலாக 1982-ல் நடைபெற்றது. மக்கள் நீதிமன்றத்தில் ஏற்படும் முடிவு, நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு இணையாகக் கருதப்படுகிறது. மக்கள் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எந்த நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்ய முடியாது. நீதிமன்றக் கட்டணம் கிடையாது. உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்குகளில், மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு ஏற்பட்டால் வழக்குக்காக ஏற்கெனவே கட்டிய நீதிமன்றக் கட்டணத்தை திரும்பப் பெற முடியும். இருதரப்பினரின் சமாதானத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

SCROLL FOR NEXT