தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலில் புதியவர்களுக்கு வாய்ப்பு: அதிமுகவில் வார்டு வாரியாக வேட்பாளர் பரிந்துரை பட்டியல் தயாரிப்பு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

வரும் உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வார்டு வாரியாக வேட்பாளர் பரிந்துரை பட்டியல் தயாரிப்பு தீவிரமாக நடக்கிறது. இதில் மக்கள் செல்வாக்குள்ள புதிய வர்கள், அடிமட்ட நிர்வாகிகள் மற்றும் சிறப்பாக செயல்படும் கவுன்சிலர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்க கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு அதிகளவு பதவிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆனால், வெற்றி பெற்று உள்ளாட்சி பதவிகளில் அமர்ந்த பெரும்பாலான நிர்வாகிகள், கட்சி மூத்த நிர்வாகிகள், அடிமட்ட நிர்வாகிகளை அரவணைத்து செல்லவில்லை என்றும் வார்டுகளில் சாலை, குடிநீர் மற்றும் சுகாதாரப்பணிகளை சரிவர செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. மீண்டும், இவர்களுக்கே உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு வழங்கினால் சட்டமன்ற தேர்தலை போல் அதிமுகவுக்கு திமுக கடும் போட்டியை கொடுக்கக்கூடும் என கருதப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக உள்ளாட்சித்தேர்தலில் மெகா வெற்றிபெற தேர்தல்பணிகளை தற்போதே தொடங்கியுள்ளது.

கட்சி தலைமைக்கு அனுப் புவதற்காக மாவட்டம் தோறும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளருக்கான பரிந்துரை நிர்வாகிகள் பட்டியல் தயாரிப்பு பணி சத்தமில்லாமல் நடக்கிறது. மாநகராட்சி போட்டியிட விரும்பும் நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர் பகுதியில் இரண்டு ஆண் நிர்வாகிகள், இரண்டு பெண் நிர்வாகிகள் பட்டியலை அந்தந்த மாவட்ட, ஒன்றிய, நகரச் செயலாளர்கள் தயாரிக்கின்றனர்.

இவர்களில் செல்வாக்குள்ள புதியவர்கள், இதுவரை வாய்ப்பு கிடைக்காத அடிமட்ட நிர்வாகிகள், தற்போது பதவியில் இருப்பவர்கள், இந்த பட்டியலில் சேர்க்கப்படுகிறன்றனர். முடிவில் இந்த பட்டியல் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் மூலம் கட்சித் தலைமைக்கு அனுப்பப்படுகிறது. கட்சித் தலைமை தனியாக நியமிக்கும் குழு மூலம், இந்த பட்டியலில் இடம்பெற்றவர்களை விசாரித்து அவர்களில் வெற்றி வாய்ப்புள்ள மக்கள் செல்வாக்குள்ள புதியவர்கள், இதுவரை வாய்ப்பு கிடைக்காத அடிமட்ட நிர்வாகிகளுக்கு போட்டியிட வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த முறை உள்ளாட்சிப்பதவிகளில் பெரும்பாலும் மாநகர, நகர, பேரூர் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் இருந்தவர்கள், அவர்களின் நெருங்கிய ரத்த உறவினர்களே அமர்ந்தனர்.

அதனால், கட்சிப்பதவி, உள்ளாட்சி பதவியில் அவர்கள் சிறப்பாக செயல்படவில்லை. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுக பெரும் சரிவை சந்தித்திற்கு இது முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. அதனால், இந்த முறை உள்ளாட்சி பதவிகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட உள்ளதாகவும், மற்றவர்களை மாவட்டச் செயலாளர்கள் பரிந் துரை செய்தாலும் கட்சித் தலைமை தனியாக நியமிக்கும் குழு மூலம் விசாரித்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது எனக் கூறப்படுகிறது.

அதனால், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர், ஒன்றிய, நகரச்செயலாளர்கள் பரிந்துரை இந்த முறை செல்லுபடியாகாது என்பதால், தற்போது பதவியில் இருக்கும் உள்ளாட்சித் தலைவர்கள், கவுன்சிலர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

கட்சித் தலைமை தனியாக நியமிக்கும் குழு மூலம், இந்த பட்டியலில் இடம்பெற்றவர்களை விசாரித்து அவர்களில் வெற்றி வாய்ப்புள்ள மக்கள் செல்வாக்குள்ள புதியவர்கள், இதுவரை வாய்ப்பு கிடைக்காத அடிமட்ட நிர்வாகிகளுக்கு போட்டியிட வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது

SCROLL FOR NEXT