ஆர்.கே.நகரில் அதிமுகவினர் ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கி வருகிறார்கள் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழகத்தில் நடப்பது இடைத்தேர்தல் இல்லை. எடைத் தேர்தல். திமுக திருமங்கலம் பார்முலாவையும், அதிமுக ஆர்.கே.நகர் பார்முலாவையும் அறிமுகப்படுத்தின. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவினர் ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கி வருகிறார்கள். திமுக ரூ.5 ஆயிரமாவது கொடுக்கும். மற்ற கட்சிகள் இதேபோல் பணம் கொடுப்பார்கள். ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் குறைந்தது ரூ.50 ஆயிரம் கிடைத்துவிடும்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுகவினரும், திமுகவினரும் அளவில் பணம் கொடுத்தனர். இந்த இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறப் போவதில்லை.
வரவுள்ள உள்ளாட்சி மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி சாராத பொது இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க திட்டமிட்டு இருக்கிறோம். தற்போதைய முதல்வரிடம் தமிழகத்தின் பிரச்சினை பற்றி பேசி பயனில்லை'' என்று அன்புமணி கூறினார்.