சென்னை மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்புத் தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:
தேசிய வன கொள்கையின்படி சென்னையில் 33 சதவீத நிலப்பரப்பு, அதாவது 426 சதுர கிலோ மீட்டரில் 142 சதுர கிலோ மீட்டர் பரப்புக்கு பசுமை போர்வை இருக்க வேண்டும். ஆனால் 9 சதுர கிலோ மீட்டர் (6.5 சதவீதம்) மட்டுமே பசுமைப் போர்வை உள்ளது. மீதம் உள்ள 133 சதுர கிலோ மீட்டர் பரப்பில் பசுமை போர்வையை ஏற்படுத்த வேண்டும்.
மாநகராட்சியில் நிதி, வருவாய், பொது நிர்வாகம், கல்வி, பொது சுகாதாரம், குடும்ப நலம், நிலஉடைமை ஆகிய துறைகள் தனியாக இயங்கி தேசிய அளவில் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகின்றன. அதனால், பூங்கா துறை சிறப்பாக செயல்படும் விதமாக, இதுவரை மாநகாரட்சி பொறியியல் துறையின் ஒரு பிரிவாக இயங்கி வந்த பூங்கா துறையை தனித் துறையாக மாற்ற அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
அரசிடம் இருந்து அரசாணை பெறும்வரை, பசுமைப் போர்வை தொடர்பான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள, மத்திய வட்டாரத் தில் உள்ள பூங்கா கண்காணிப்பாளர் பணியிடம், தலைமையிடத்துக்கு மாறுதல் செய்யப்படுகிறது. அவரது தலைமையில், மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) கண்காணிப்பில் பூங்கா துறை தனியாக இயங்கும்.
இனி, கட்டிடங்கள், பேருந்து சாலைகள், சிறப்புத் திட்டங்கள், மழைநீர் வடிகால், பாலங்கள் உள்ளிட்ட துறைகள், பூங்கா துறையின் ஒப்புதல் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி பூங்கா துறை அலுவலர்கள் கூறும்போது, ‘‘தற்போது தனித்துறை யாக மாற்றப்பட்ட நிலையில் அலுவலக கட்ட மைப்பு, துறை சுதந்திரமாக செயல்பட வாய்ப்பு ஆகியவை கிடைக்கும். இனி பணிகளுக்காக ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என்றாலும் அனுமதி பெற வேண்டும்’’ என்றனர்.