தமிழகம்

மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையின்போது பிடிபடும் சமூக விரோத கும்பல்கள்: வனத் துறையினருடன் கைகோர்க்கும் அதிரடிப்படை போலீஸார்

செய்திப்பிரிவு

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, போளுவாம்பட்டி, மாங்கரை உள்ளிட்ட கேரள எல்லையோரங்களில் உள்ள வனப் பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளது.

மாவோயிஸ்ட் கும்பல் அவ்வப்போது இரு மாநில எல்லையோர மலைக் கிராமங்களுக்கு வந்து செல்வதாகவும், அங்குள்ள பழங்குடி மக்களை மூளைச்சலவை செய்வதாகவும் கிடைத்த தகவலின்பேரில், கடந்த சில மாதங்களாக இந்தப் பகுதிகளில் பாதுகாப்பும், கண்காணிப்பும், தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக, கேரள மாநில எல்லையோரங்களில் உள்ள காவல் துறை மற்றும் வனத் துறை சோதனைச்சாவடிகளில் தேடப்படும் மாவோயிஸ்ட்கள், நக்ஸலைட்டுகள் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மேலும், வனப் பகுதிகளுக்குள் உள்ள பழங்குடியினரின் குடியிருப்புகளில் அடிக்கடி முகாம் நடத்தி, அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிவதுடன், புதிய நபர்கள் வருகை, மாவோயிஸ்ட் உள்ளிட்டோரின் நடமாட்டம் குறித்தும் அதிரடிப் படைப் போலீஸார் மற்றும் வனத் துறையினர் கேட்டறிகின்றனர்.

அடர்ந்த காட்டின் பாதைகள் வனத் துறையினருக்குத் தெரியும் என்பதால், அவர்களின் உதவியுடனே அதிரடிப் படையினர் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இரு மாநில எல்லையோரக் காடுகளில் வனத் துறையினரும் சிறப்புக் குழுக்கள் அமைத்து, வனத்தில் புதிய நபர்கள் நடமாட்டம் உள்ளதா எனவும் கண்காணிக்கின்றனர்.

அதிரடிப் படையினரின் ரோந்துப் பணியின்போது, காடுகளுக்குள் மரம் கடத்தல், வன விலங்குகள் வேட்டை உள்ளிட்டவற்றில் ஈடுபடும் சமூக விரோதக் கும்பல்கள் பிடிபட்டால், அவர்களை விசாரித்து, பின்னர் வனத் துறை வசமே ஒப்படைக்கின்றனர். அவர்கள் மீது வனத் துறையினர் அபராதம், சிறைத் தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக வனக் குற்றங்களில் ஈடுபடுவோர் அதிக அளவில் பிடிபடுவதால், வனப் பகுதிகளில் குற்றங்கள் குறைந்துள்ளதாக வனத்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

மான் இறைச்சி விற்பனை

சில மாதங்களுக்கு முன் வன விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகளுடன் ஒரு கும்பல் பிடிபட்டது. மேலும், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை பகுதிகளில் வேட்டையாடப்படும் மான்களின் இறைச்சி இரு மாநில எல்லையோரப் பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாகவும், பழங்குடியின மக்கள் முகாம்களின்போது அதிரடிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, மான் இறைச்சியை விற்பனை செய்த அன்னூர் செல்வத்தை வனத் துறையினர் கைது செய்தனர். தனக்கு மான் இறைச்சியை சிறுமுகையைச் சேர்ந்த மாரிமுத்து கொடுத்து, விற்கச் சொன்னதாக விசாரணையில் தெரிவித்துள்ளார் செல்வம்.

பின்னர், சிறுமுகை வனத்தையொட்டியுள்ள மாரிமுத்து வீட்டைக் கண்டுபிடித்து சோதனையிட்டபோது, மான் தோல், இறைச்சி, மான்களைப் பிடிக்கப் பயன்படுத்தப்படும் சுருக்குக் கம்பிகள் கைப்பற்றபட்டன. மேலும், கள்ளசாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 50 லிட்டர் ஊறலும் பிடிபட்டது.

இதுகுறித்து சிறுமுகை, மேட்டுப்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த வனத் துறை அலுவலர்கள் கூறியதாவது: கேரள- தமிழகப் பகுதிகளில் உள்ள அடர்ந்த வனப் பகுதிகளில் முன்பெல்லாம் ஆள்நடமாட்டம் இல்லாமல் இருந்தது. அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வேட்டைத் தடுப்புக் காவலர்களுடன் அங்கு அலுவலர்கள் செல்வார்கள். அல்லது குறிப்பிட்ட பகுதிகளுக்கு 3 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை வேட்டைத் தடுப்புக் காவலர்கள் உதவியுடன் வனவர் மற்றும் வனத் துறையினர் சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர். அவ்வாறு செல்லும்போது, வனக் குற்றங்களில் ஈடுபடுவோர் பிடிபடுவது அபூர்வமாக இருக்கும்.

இப்போதெல்லாம் ஒவ்வொரு பகுதியிலும் அதிரடிப் படைப் போலீஸார் ஊடுருவியுள்ளனர். அவர்களுக்கு, வனவர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் வழிகாட்டுவதுடன், பாதுகாப்பாகவும் செல்கின்றனர். தவிர, பல்வேறு பகுதிகளில் நேரடியாகவே வனத் துறை அதிகாரிகள் ரோந்து சென்று, மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ளதா என்றும் கண்காணிக்கின்றனர். பழங்குடி மக்களுடனும் நெருங்கிப் பழகுகின்றனர். இதனால்தான், பல வனக் குற்றங்கள் வெளிப்பட்டு, அதில் ஈடுபடுவோர் பிடிபட்டுள்ளனர்.

வனத்துக்குள் தேக்கு, சந்தன மரக் கடத்தல், கஞ்சா பயிரிடுவது, மான், காட்டெருமை இறைச்சி கடத்துவது ஆகியவை அண்மையில்தான் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், அண்மைக்காலமாக சாராய ஊறல் போடுவதும் தொடங்கியது என்றனர்.

சாராய ஊறலால் பாதிப்பு

இது தொடர்பாக சூழலியலாளர்கள் கூறும்போது, “கெட்டுப்போன பழங்களைக் கொண்டு சாராய ஊறல் தயாரிக்கப்படுவதால், யானைகள் உள்ளிட்ட விலங்குகள் இதன் வாசனையை மோப்பம் பிடித்துக்கொண்டு, இங்கு வந்துவிடுகின்றன. அவை ஊறலைக் குடித்துவிட்டு, போதையில் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளை சேதப்படுத்துகின்றன. ஊருக்குள்ளும் நுழைகின்றன. மேலும், யானைகளுக்கு குடல்நோய், வயிற்று உபாதைகள் வரவும் இவை காரணமாக உள்ளன.

இந்தப் பகுதியில் உள்ளது தமிழகத்தை ஒட்டியுள்ள கேரளப் பகுதியான அட்டப்பாடி. அங்கு முழுமையான மதுவிலக்கு அமலில் உள்ளது, மேலும், ஆனைகட்டியில் இருந்த டாஸ்மாக் மதுக் கடையும் மக்கள் போராட்டத்தால் மூடப்பட்டுவிட்டது. இதனால் வெளியூர்களில் மது பாட்டில்களை வாங்கி வந்து விற்போர் அதிகரித்து வருகின்றனர். அதிலும் பல சிக்கல்கள் இருப்பதால், தற்போது எல்லையோரக் காடுகளுக்குள் சாராய ஊறல் போடுவது அதிகரித்துள்ளது” என்றனர்.


சிறுமுகை பகுதியில் வனத் துறையினரால் கைப்பற்றப்பட்ட சாராய ஊறல்

SCROLL FOR NEXT