சட்டப்பேரவையில் இருந்து டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ.,வான தங்க தமிழ்செல்வன் வெளிநடப்பு செய்தார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ஒருவர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டப் பேரவையில் இன்று (திங்கட்கிழமை) எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயுத்தீர்வை மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.
முன்னதாக, சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின்போது நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தங்கதுரை, மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக ஒரு கேள்வியை முன்வைத்தார். நிலக்கோட்டை தொகுதி வத்தலகுண்டு ஒன்றியத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார். அப்போது துணைக் கேள்வி ஒன்றை முன்வைத்த ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ., "ஆண்டிப்பட்டி தொகுதி கருமத்தம்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படவில்லை" எனக் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், "துணைக் கேள்வியை ஏற்கெனவே நீங்கள் கொடுக்கவில்லை. கேள்வி நேரத்துக்கான பட்டியலிடப்பட்ட கேள்விகளில் தங்கள் கேள்வி இடம்பெறவில்லை. எனவே கேள்வி எழுப்ப முடியாது" என்றார்.
இதனையடுத்து தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி அவர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். பின்னர், அவர் மீண்டும் அவை நடவடிக்கையில் கலந்து கொண்டுள்ளார்.