காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று கூறும்போது, "தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே கடந்த சில நாட்களாக நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.
ஆனால், மேல் அடுக்கு சுழற்சியில் காற்று மேலும் கீழும் மாறி மாறி வீசுவதால், அது காற்றழுத்த மண்டலமாக மாறாமல் அதே இடத்தில் தொடர்ந்து காற்றழுத்த பகுதியாகவே நிலை கொண்டுள்ளது. நாளை இது காற்றழுத்த மண்டலமாக மாறலாம் என்று கணிக்கப்படுகிறது. அது, வடக்கு நோக்கி நகரும் வாய்ப்பும் உள்ளது.
காற்றழுத்த பகுதி அதே இடத்தில் நீடிப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு அனேக இடங்களில் பரவலான மழையும், ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யும். உள் மாவட்டங்களிலும் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்யக்கூடும்" என்றார் ரமணன்.