அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கட்சிப் பணி ஆற்றும் விவகாரத்தில் தமிழக அமைச்சர்கள் மாறுபட்டு கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திண்டுக்கல்லில் நேற்று பேசிய அமைச்சர் சி.சீனி வாசன் ‘கட்சிப் பணியாற்ற உள்ளேன் என்று துணைப் பொதுச்செய லாளர் டி.டி.வி.தினகரன் கூறுவதற்கு அவருக்கு முழு உரிமை உள்ளது.
நாங்கள் கட்சியில் இருந்து அவரை நீக்கவில்லை. அவர் தானாகவே விலகி இருப்பதாகக் கூறினார். இப்போது அவர் கட்சிப் பணியாற்றுவேன் என்று கூறியதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
தினகரனை சந்திக்க மாட்டோம் என அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியது அவருடைய சொந்தக் கருத்து என்றார்.
கோவை, வெள்ளலூரில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலு மணி, “டிடிவி.தினகரன் கட்சியில் தொடர்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தி உரிய முடிவு செய்வோம்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்தும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்” என்றார்.