அதிமுகவில் அதிகாரப் போட்டி நடக்கிறது. அவர்களால் ஆர்.கே. நகர் தொகுதிக்கு எந்தப் பயனும் இல்லை என்று பாஜக வேட்பாளர் கங்கை அமரன் கூறினார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டையில் கங்கை அமரன் நேற்று ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். கொருக்குப்பேட்டை 41-வது வார்டுக்கு உட்பட்ட கேஎன்எஸ் டிப்போ அருகே பிரச்சாரத்தை தொடங்கிய அவர், ஜெ.ஜெ.நகர், அண்ணாநகர், திருவள்ளுவர் நகர், கருமாரியம்மன் நகர், முனீஸ்வரன் நகர், மூப்பனார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருத் தெருவாக சென்று வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்துக்கு இடையே நிருபர்களிடம் பேசிய கங்கை அமரன், ‘‘ஆர்.கே.நகர் தொகுதியில் போக்குவரத்து நெரிசல், குடிநீர் தட்டுப்பாடு போன்ற முக்கிய பிரச்சினைகள் நீண்டகாலமாக தீர்வு காணப்படாமல் உள்ளன. அதிமுக வில் இரு அணிகளுக்கு இடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது. அதிமுகவால் ஆர்.கே.நகருக்கு எந்தப் பயனும் இல்லை. பாஜகவின் வளர்ச்சி பிடிக்காதவர்கள், ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்’’ என்றார்.
பிரச்சாரத்தின்போது பாஜகவினர் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரத்தை பொது மக்களுக்கு விநியோகித்தனர். அதில் குடிநீர், போக்குவரத்து நெரிசல், கொடுங்கையூர் குப்பை கிடங்கு போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்பன உள்ளிட்ட 29 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
அப்பகுதி மக்கள் சிலர் கங்கை அமரனிடம் ஆட்டோகிராப் வாங்கினர். சிலர் தங்கள் குழந்தைகளை கொடுத்து செல்போனில் புகைப்படம் எடுத்துகொண்டனர்.