ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 39 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். வேட்பாளரை தேர்வு செய்ய அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நேர்காணல் நடக்கிறது.
சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுகிறது. அ.தி.மு.க.வுக்கு எதிராக நிறுத்தப்படும் தி.மு.க. வேட்பாளரை பொது வேட்பாளராக கருதி அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி, பா.ஜ.க. தே.மு.தி.க. கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கிடையே, ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் 9, 10-ம் தேதி ஆகிய 2 நாட்கள் மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் நாளான 9-ம் தேதி கட்சியினர் யாரும் மனு கொடுக்கவில்லை. கடைசி நாளான வியாழக்கிழமை முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன் உள்பட 39 பேர் விருப்ப மனு அளித்தனர்.
ஏற்கனவே தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்த படி, வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் சென்னையில் உள்ள கட்சி தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடக்கிறது.
கட்சியின் தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர் துரை முருகன் ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு, விருப்ப மனு அளித்தவர்களை நேர்காணல் செய்யும். தேர்வுசெய்யப்படும் வேட்பாளர் யார்? என்பது வெள்ளிக்கிழமை இரவு அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.