தமிழகம்

சட்டப்பேரவை தேர்தல் தோல்வி எதிரொலி: திமுகவில் தொடரும் களையெடுப்பு - ஒன்றியச் செயலாளர்கள் பலர் நீக்கம்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திமுக ஒன்றியச் செயலாளர்கள் பலர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அதிக தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. திமுக கூட்டணி 98 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. இதில் திமுக 89, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 தொகுதிகளில் வெற்றிபெற்றன. 100-க்கும் குறைவான வாக்கு கள் வித்தியாசத்தில் 2 தொகுதி களிலும், 100 முதல் 1,000 வரையிலான வாக்குகள் வித் தியாசத்தில் 8 தொகுதி களிலும், 1000 முதல் 5 ஆயிரம் வரையிலான வாக்குகள் வித்தியாசத்தில் 21 தொகுதி களிலும் திமுக கூட்டணி வேட் பாளர்கள் தோல்வி அடைந்தனர்.

தேர்தல் தோல்விக்கு திமுக வினரின் உள்ளடி வேலைகளே காரணம் என தோல்வி அடைந்த வேட்பாளர்களும், கூட்டணி கட்சிகளும் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் புகார் தெரி வித்தனர். கடந்த மாதம் 24-ம் தேதி நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய, வேட்பாளர்கள், தங்களுக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் எப்படியெல்லாம் வேலை செய் தார்கள் என்பதை கண்ணீருடன் எடுத்துரைத்தனர்.

செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ‘‘கட்சிக்கு துரோகம் செய்தவர்களைப் புரிந்து கொள்ள இந்த செயற்குழு உதவியது. எதிரிகளைக் கூட மன்னிக்கலாம். துரோகிகளை மன்னிக்க முடியாது’’ என தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 10-ம் தேதி கோவை மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் எம்.வீரகோபால், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் செ.காந்திச் செல்வன், திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலாளர் பெ.கி.துரைராஜ் ஆகியோர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர்.

புகார் மனுக்கள் குவிந்தன

இதைத்தொடர்ந்து தேர்த லில் தோல்வி அடைந்த வேட் பாளர்களும், தொண்டர்களும் உள்ளடி வேலை செய்த நிர்வாகிகள் பற்றி கட்சித் தலைமைக்கு புகார் கடிதங்களை அனுப்பினர்.

ஆயிரக்கணக்கான புகார்கள் குவிந்ததைத் தொடர்ந்து தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களின் தோல் விக்கு காரணமான ஒன்றியச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகி களை நீக்கும் பணியை திமுக தொடங்கியுள்ளது.

திருவாரூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் வி.எஸ்.சண்முகம், தஞ்சை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ், தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் மு.கி.முத்துமாணிக்கம், பேராவூரணி ஒன்றியச் செயலாளர் என்.எஸ். சேகர், விழுப்புரம் தெற்கு மாவட்டம் திருக்கோவிலூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆதி.சங்கர் உள்ளிட்டோர் கட்சி பொறுப்புகளில் இருந்து நேற்று முன்தினம் நீக்கப்பட்டனர். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ளார்.

கட்சித் தலைமை எடுத்து வரும் இந்த நடவடிக்கையால் திமுக நிர்வாகிகள் பலர் கலக்கமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT