தமிழகம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடக்கும் தமிழர்களின் போராட்டத்தை உலகமே நோக்குகிறது: நாகர்கோவிலில் வைகோ பெருமிதம்

செய்திப்பிரிவு

``ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக லட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டு நடத்தும் போராட்டத்தை உலகமே உற்று நோக்குகிறது” என்று வைகோ கூறினார்.

சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலனுக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்க நாகர்கோவில் வந்த வைகோ, நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தின் சரித்திரத்தில் எப்படிப்பட்ட உணர்வுகள் மலர வேண்டும் என நான் நினைத்தேனோ அது நடந்திருக்கிறது.

அரசியலுக்கு இடம் கொடுக்காமல் கோடிக்கணக்கான மக்களை லட்சக்கணக்கான மாணவர்கள் ஒன்றிணைத்துள்ளனர். போராட்டம் மூலம் தமிழர் நாகரிகத்தை உலகுக்கு காட்டியுள்ளனர். அவர்களது போராட்டத்தில் ஒரு இடத்தில் கூட வன்முறை, ஆபாச அர்ச்சனை இல்லை. தமிழகத்தில் இதுவரை இல்லாத நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய குற்றவாளி

ஜல்லிக்கட்டுக்கு தடை விவகாரத்தில் முக்கிய குற்றவாளி மன்மோகன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி. அவரது மந்திரி சபையில் திமுகவும் இருந்தது. 2011-ம் ஆண்டு ஜூலை 11-ல் காட்டில் திரியும் கொடிய விலங்குகளின் பட்டியலில், வீடுகளில் செல்லப் பிள்ளைகளாக வளர்க்கும் காளைகளை சேர்த்தனர். இதை நியாயப்படுத்தி அன்றைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், `ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனம்’ என்று கூறினார்.

மன்மோகன்சிங் கடந்த 2015ல் பீட்டாவின் செயலை வரவேற்று கடிதம் எழுதியிருக்கிறார். அப்போது, அதை திமுக ஏன் தடுக்கவில்லை?. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மோடியின் சூசகமான நடவடிக்கைகள் நமக்கு உறுதுணையாக இருக்கும். திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சந்தடி சாக்கில் உண்ணாவிரதம் இருப்பதாக சொல்கிறார்.

தட்டிக் கேட்க வேண்டும்

சூழ்நிலையை கிரகித்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கர்நாடகா மதித்ததா, கேரளா மதித்ததா என பல கேள்விகளை மாணவர்கள் கேட்கிறார்கள். தமிழகத்தில் எந்த அநீதி நடந்தாலும் மாணவர்கள் தட்டிக்கேட்க வேண்டும்.

சரியான முடிவு

முதல்வர் பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டு பிரச்னையை கட்டுப்பாட்டுடன் அணுகியுள்ளார். இரண்டு நாட்களில் ஜல்லிக்கட்டுக்கான அறிவிப்பு வரும். தமிழர் போராட்டத்தை உலகமே உற்று நோக்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

          
SCROLL FOR NEXT