குறைந்தழுத்த மின்சாரத்தால் இருதயபுரம் கிராமம் இருளில் தவிக்கிறது. மண்ணெண்ணெய் விளக்குகளை ஏற்றிவைத்து படிக்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை வட்டம் நவம்பட்டு ஊராட்சி இருதயபுரம் கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் உள்ளன. அவர்களது வீடுகளுக்கு மின்சார இணைப்புகள் வழங்கப் பட்டும் பலனில்லை. குறைந்தழுத்த மின்சாரம் கிடைப்பதால், மின்சாதனப் பொருட்கள் மற்றும் மின் விளக்குகளைப் பயன்படுத்த முடியவில்லை என்று கிராம மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, “இருதயபுரம் கிராமத்துக்கு தச்சம் பட்டு துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் கொண்டு வரப் பட்டு வீடுகளில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம், குறைந்தழுத்த மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. பகலில் எப்போதாவது மின்சாரம் முழுமை யாக கிடைக்கும். அதுவும் நீண்ட நேரம் நீடிக்காது. மாலை 6 மணிக்கு பிறகு குறைந்தழுத்த மின்சாரம்தான் கிடைக்கும்.
இதனால், வீடுகளில் உள்ள மின் விளக்குகள் மற்றும் தெரு விளக்கு கள் கூட எரியாது. மின்சாதனப் பொருட்களைப் பயன்படுத்த முடியாது. அரசாங்கம் வழங்கிய மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப் படும் ‘லேப் டாப்’ ஆகியவை ஒவ்வொரு வீட்டிலும் காட்சிப் பொரு ளாக உள்ளது. இரவு நேரத்தில் மின் விளக்குகளில் இருந்து கிடைக் கும் வெளிச்சமானது, மண்ணெண்ணெய் விளக்கில் இருந்து கிடைக்கும் வெளிச்சத்தை விட குறைவாக இருக்கும். இருளில் வாழ்ந்தே பழகிவிட்டது.
மின் விளக்குகள் எரியாததால் மாணவ, மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது. 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் சிரமப்படு கின்றனர்.
மண்ணெண்ணெய் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துப் படிக்கின்றனர். மோட் டார் இயங்காததால் குடிநீர் பிரச்சி னையும் உள்ளது. விவசாய நிலத் தில் இயக்கப்படும் மோட்டார் மூலம் தண்ணீரைப் பிடித்து வருகிறோம்.
குறைந்தழுத்த மின்சாரம் கிடைப்பதால் மோட்டாரை இயக்க முடியவில்லை. இதனால் விவசாயப் பணியும் பாதிக்கப்படுகிறது. குறைந்தழுத்த மின்சாரத்தில் மோட்டார்களை இயக்கும்போது, அவை பழுதடைந்துவிடுகின்றன. இருதயபுரத்துக்கு ‘தனி மின்மாற்றி’ அமைத்தால் தடையில்லாத மின்சாரம் கிடைக்கும்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் ஆகியோரிடம் பலமுறை மனு கொடுத்துவிட்டோம். ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை.
இதுகுறித்து தச்சம்பட்டு துணை மின் நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘குறைந்தழுத்த மின் விநியோகத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.இருத யபுரம் கிராமத்தில் தனி மின்மாற்றி அமைப்பது குறித்து, உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்’ என்றார்.