தமிழகம்

வைர வியாபாரியை காரில் கடத்தி கொள்ளை: பிரபல நெல்லை மாவட்ட ரவுடி, கூட்டாளிகளுடன் கைது

செய்திப்பிரிவு

சென்னையில் கேரள வைர வியாபாரியை துப்பாக்கிமுனையில் காரில் கடத்திச் சென்று ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளை யடித்த நெல்லை மாவட்ட ரவுடி மற்றும் அவரது கூட்டாளிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரளாவை சேர்ந்தவர் சூரஜ். வைர வியாபாரி. சென்னையிலும் வியாபாரம் செய்கிறார். இவர் கடந்த மாதம் 4-ம் தேதி சென்னை வந்துள்ளார். அப்போது, 2 பேர் இவரை அணுகி, பட்டை தீட்டாத வைரம் வேண்டும் என்று கேட்டுள் ளனர். இதற்கான ஏற்பாடுகளை செய்துவந்த சூரஜ், கடந்த மாதம் 8-ம் தேதி வடபழனியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார்.

அப்போது, முகமூடி அணிந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கிமுனையில் சூரஜ்ஜை காரில் கடத்திச் சென்றது. அவரிடம் இருந்து செயின், மோதிரம், பட்டை தீட்டாத வைரம் உட்பட ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகைகளைப் பறித்துக்கொண்டு, அவரை போரூரில் இறக்கிவிட்டு விட்டு தப்பிச் சென்றது.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த இடையன்குளத்தை சேர்ந்த பிரபல ரவுடி சியாம்சுந்தர் சிங் (44) என்பவர் சூரஜ்ஜிடம் கொள்ளையடித்துச் சென்றது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. போலீஸார் தனிப்படை அமைத்து அவரை தேடிவந்தனர்.

இந்நிலையில், விருகம்பாக்கம் போலீஸார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட் டிருந்தனர். அந்த வழியாக வந்த காரை மடக்கினர். போலீஸாரை பார்த்ததும் காரில் இருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களில் 6 பேரை போலீஸார் துப்பாக்கி முனையில் பிடித்து காவல் நிலை யத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதில், பிடிபட்டிருப்பது வைர வியாபாரி சூரஜ்ஜிடம் கொள்ளை யடித்த நெல்லை மாவட்ட ரவுடி சியாம்சுந்தர் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளான பெரும்புதூர் டெல்லி என்ற மைக்கேல் (29), அதே பகுதி சையது முகமது உசேன் (30), விஜயகுமார் (26), பொழிச்சலூர் அமுதவாணன் (30), குமரன் நகர் ஜெய்சிங் (38) என்பது தெரியவந்தது. 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி, 6 தோட்டாக்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள சியாம் சுந்தர் சிங், நெல்லை மாவட்டம் இடையன்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர்.

SCROLL FOR NEXT