திருவள்ளூர் அருகே முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணாவின் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் அருகே உள்ள மேல்நல்லாத்தூர் பஜார் பகுதியில் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இந்த கூட்டத்தில் அதிமுகவின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், பொன்னேரி எம்.எல்.ஏ.வுமான சிறுணியம் பலராமன், பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஏழுமலை, முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் பி.வி.ரமணா, பூந்தமல்லி முன்னாள் எம்.எல்.ஏ. மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, தனது உதவியாளரான புங்கத்தூரைச் சேர்ந்த பொன்முடி உள்ளிட்டோருடன் இரவு 9.30 மணியளவில் காரில் திருவள்ளூர் சென்று கொண்டிருந் தார். மேல்நல்லாத்தூர் சிவன்கோயில் அருகே சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவின் கார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தி விட்டு தப்பியோடினர். இதில் காரின் பின்புற பகுதி சேதமடைந்தது.
இதுகுறித்து, முன்னாள் அமைச்சரின் உதவியாளர் பொன்முடி, திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருவள்ளூர் தாலுக்கா போலீஸார் விசாரணை நடத்தி, அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையைச் சேர்ந்த, வெங்கத் தூர்கண்டிகையைச் சேர்ந்த வசந்தகுமார்(24) என்பவரை நேற்று கைது செய்தனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.