தமிழகம்

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா: திமுக, ஓபிஎஸ் அணி, பாஜக, மார்க்சிஸ்ட் புகார் - தலைமை தேர்தல் அதிகாரி லக்கானியிடம் நேரில் மனு அளித்தனர்

செய்திப்பிரிவு

அதிமுக (அம்மா) கட்சி வேட்பாளர் தினகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாகவும், தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக, ஓபிஎஸ் அணி, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் அளித்துள்ளன.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் 12-ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் கொடுப்பதாக தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு பல்வேறு கட்சிகள் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. பணப் பட்டுவாடாவை தடுக்கும் விதமாக, தேர்தல் ஆணையமும் மத்திய படைகள் எண்ணிக்கை, தேர்தல் பார்வையாளர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன் தினம், ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் பட்டுவாடா செய்ததாக பலர் பிடிபட்டனர். இது தொடர்பாக, நேற்று பாஜக, அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன.

இது தொடர்பாக அக்கட்சிகளின் பிரதிநிதிகள் கூறியதாவது:

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: இந்திய சரித்திரத்தில் அதிக அதிகாரிகள் தேர்தலுக்கு நியமிக்கப்பட்டதும், மாற்றப்பட்டதும் ஆர்.கே.நகரில் தான். இருந்தாலும் விதி மீறல்கள் நடக்கிறது. நேற்று பேருந்துகளில், வீடுகளில் பணம் கொடுத்துள்ளனர். வீடுகளில் குறியீடுகள் எழுதி வைத்துள்ளனர். டிடிவி தினகரன் கட்சியை சேர்ந்தவர்கள்தான் முறைகேடுகளில் ஈடுபட்டு பிடிபட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தால் இந்த தேர்தலை நேர்மையாக நடத்த முடியவில்லை என்றால் தேர்தலை ரத்து செய்யலாம்.

அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி எம்.பி. மைத்ரேயன்: தேர்தல் ஆணையம் அதிமுக பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை தற்காலிகமாக முடக் கியது. ஆனால், அதிமுக அம்மா கட்சியினர், அதிமுக பெயர், இரட்டை இலை சின்னத்தை இணை யதளம், முகநூல், ட்விட்டரில் பயன் படுத்துகின்றனர். இது தொடர்பாக ஆணையம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. அதன்பின்பும் தினகரன் படத்துடன், தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள்தான் அதிமுக என்ற மாய தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இது தேர்தல் விதிமுறை மீறல். தற்போது வாக்காளர்களுக்கு ரூ.4 ஆயிரம் என தொகுதி முழுவதும் கொடுத்து முடித்துள்ளனர். இதை தடுக்காத தால், தேர்தல் ஆணையம் தோற்று விட்டதாகவே கருதுகிறோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: ஆர்.கே.நகரில் தொகுதி முழுவதும் 50 வாக்காளர்களுக்கு ஒருவர் நியமிக்கப்பட்டு, ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கியுள்ளனர். இது தொடர்பாக தேர்தல் பார்வையாளர்களிடம் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. தேரடியில் அமைச்சர், முன்னாள் எம்எல்ஏவும் டோக்கன் வழங்கியுள்ளனர். போலீசார் அங்கு சென்று நடவடிக்கை எடுக்க வில்லை.

தேர்தலை ஒத்திவைப்பதோ, ரத்து செய்வதோ சரியாக இருக் காது. அதற்கு பதில், எந்த வேட்பாள ருக்காக பணம் வழங்கப்பட்டதோ, அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். டிடிவி.தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

திமுக மாநிலங்களவை எம்.பி. ஆர்.எஸ்.பாரதி: ஆர்.கே.நகரில் சசிகலா அணியினர் வாக்காளர் களுக்கு ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரம் வரை அளித்துள்ளனர். கோடிக்கணக்கான பணம் மழையாக பெய்துள்ளது. அரசு ஆதரவுடன் நடக்கிறது. அரசு பேருந்தில் நடத்துனர், பணத்தை வாக்காளர்களுக்கு வழங்கினார். கையும் களவுமாக பிடித்து கொடுத்தாலும் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை. அதிகாரிகளை மாற்றினாலும் அவர்கள் அப்பகுதியில் இருந்து செல்லவில்லை. இது தொடர்பாக ஆதாரங்களுடன் புகார் அளித் துள்ளோம். டெல்லியிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுகவை பொறுத்தவரை தேர்தல் நியாயப்படி நடக்க வேண்டும். தேர்தலை தள்ளி வைக்க கூடாது.

இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

ரூ.14 லட்சம் பறிமுதல்: 28 பேர் கைது

ஆர்.கே.நகரில் பல இடங்களில் நேற்று முன்தினம் இரவு வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் வந்துகொண்டே இருந்தது. அதைத் தொடர்ந்து 4 பறக்கும் படையினர் தொகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியில் வீடு வீடாக பணம் விநியோகித்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவரை விரட்டிப் பிடித்தனர். மற்றவர்கள் ஓட்டம் பிடித்தனர். பிடிபட்டவர் புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த செல்வம் (26) என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து ரூ.44 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவில் வீடு வீடாக பணம் விநியோகித்துக் கொண்டிருந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் (37) என்பவரையும் பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.36 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

காசிமேடு காசிபுரம் பி பிளாக் பகுதியில் பணம் விநியோகித்து கொண்டிருந்த 6 பேரை பொதுமக்கள் பிடித்து பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், சீர்காழியைச் சேர்ந்த ராஜா (40), மணிபாரதி (30), ஞானசேகர் (62), சந்திரமோகன் (40), முருகன் (38) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.1.28 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தண்டையார்பேட்டை அஜீஸ் நகர் பகுதிக்கு பறக்கும் படையினர் சென்றபோது, அங்கு சிலர் பணப்பையை சாலையில் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். அதிகாரிகள் அந்தப் பையை சோதனை செய்தபோது ரூ.10 லட்சம் இருந்தது.

ஒரே நாள் இரவில் நடத்தப்பட்ட சோதனையில் பணம் விநியோகம் செய்ததாக 28 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாகவே இவர்கள் பணம் விநியோகம் செய்ததாக போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT