தமிழகம்

பவானிசாகர் நீர்தேக்கப் பகுதியில் சேற்றில் சிக்கிய யானை மீட்பு

செய்திப்பிரிவு

பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில், சேற்றில் சிக்கிய பெண் யானையை வனத்துறையினர் மீட்டனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரகம், விளாமுண்டி வனப்பகுதியிலிருந்து நீர் அருந்துவதற்காக யானைக் கூட்டம் ஒன்று பவானிசாகர் நீர்தேக்கப்பகுதி, நடுமேடு என்ற பகுதிக்கு நேற்று வந்தது. நீர்தேக்கப் பகுதியில் வறட்சி காரணமாக, பல இடங்களில் நீர் வற்றி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. நீர் அருந்த வந்த யானைக்கூட்டத்தில் 15 வயதுள்ள பெண் யானை சேற்றில் சிக்கியது. அதனுடன் வந்த யானைகள் அதனை மீட்க முயற்சி செய்தன. ஆனால், மீட்க முடியாத நிலையில் மீண்டும் வனப்பகுதிக்குள் யானைக்கூட்டம் திரும்பி சென்றது.

சேற்றில் சிக்கிய யானை குறித்து சித்தன் குட்டை மற்றும் ஜேஜே நகர் பொதுமக்கள் அளித்த தகவலின்படி பவானிசாகர் மற்றும் சிறுமுகை வனச்சரகத்தைச் சேர்ந்த வனத்துறையினர், பொதுமக்களின் உதவியுடன் பெல்ட் மற்றும் கயிறு உதவியுடன் பெண் யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதில், சேற்றில் இருந்து மீண்ட யானை, சோர்வு காரணமாக எழமுடியாமல் மீண்டும் படுத்துவிட்டது. கோடை வெப்பம் அதிகரித்துக்கொண்டிருந்ததால் யானையின் உடல் வெப்பத்தை சீராக்க வாகன உதவியுடன் யானை உடல்மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. சிறிது நேரம் படுத்திருந்த யானை எழுந்து, பவானி ஆற்றைக் கடந்து வனப்பகுதிக்குள் சென்றது.

SCROLL FOR NEXT