தமிழகம்

ஒரு வாரத்தில் 32 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல்: 43 கொள்முதல் மையங்கள் திறப்பு

செய்திப்பிரிவு

அரசு கொள்முதல் நிலையங்கள் மூலமாக ஒரு வாரத்தில் 32 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

கூட்டுறவுத் துறை உயர் அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியதாவது:

தென்னை விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய முதல்வர் ஜெயலலிதா, உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் 20 மாவட்டங்களில் 43 கொள்முதல் மையங்கள் கடந்த ஜூன் 15-ம் தேதி திறக்கப்பட்டன. 21-ம் தேதி வரை ரூ.19 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் 32.72 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் 6 மாதங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது.

நகர்ப்புறங்களில் காய்கறி விலையை கட்டுக்குள் வைக்கவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும் திறக்கப்பட்ட பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக இதுவரை 16 ஆயிரத்து 693 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

106 அம்மா மருந்தகங்கள் மற்றும் 188 கூட்டுறவு மருந்தகங்கள் என மொத்தம் 294 மருந்தகங்களில் இதுவரை 15 சதவீத தள்ளுபடி விலையில் ரூ.352 கோடியே 91 லட்சம் மதிப்பில் தரமான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

எனவே மக்கள் நலனுக்காக முதல்வர் அறிவித்த திட்டங்கள், மக்களைச் சென்றடைய அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இரா.பழனிச்சாமி, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலர் ஆர்.லலிதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேற்கண்ட தகவல் கூட்டுறவுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT