''மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையானது, இந்திய அளவில் கல்வித் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தோற்றுப்போயுள்ளது'' என, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வி.வசந்திதேவி தெரிவித்தார்.
தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் ‘இன்றைய சூழ்நிலையில் தேசிய கல்விக் கொள்கை- 2016-ன் தாக்கம்’ என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
நேற்று நடைபெற்ற தொடக்க விழாவுக்கு கல்லூரி தலைவர் ஏ.பி.சி.வி. சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வி.வசந்திதேவி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளது. நாட்டுக்கு புதிய கல்விக் கொள்கை அவசியமானது தான். ஏனென்றால் நாட்டில் கல்வி மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறது. மனிதவள குறியீட்டை பொறுத்தவரை உலகளவில் 174 நாடுகளில் இந்தியா 137-வது இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள 200 சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று கூட இந்தியாவில் இல்லை. தற்போது தான் ஐஐடி இந்த பட்டியலில் கடைசியாக சேர்ந்துள்ளது.
தமிழகத்தில் மோசம்
தமிழகத்தை பொறுத்தவரை கல்வி சீரழிந்து கொண்டிருக்கிறது. பிஹாரை விட தமிழகத்தின் கல்வி மோசமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கல்வியின் சீரழிவுக்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்து தீர்வு காணும் வகையில் புதிய கல்விக் கொள்கை இருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை, கேடுகளை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
கல்வியில் ஏற்றத்தாழ்வு
அனைத்து வளர்ந்த நாடுகளிலும் அனைவருக்கும் சமமான கல்வியை இலவசமாக அரசே வழங்கி வருகிறது. நமது நாட்டில் 1970 வரை ஓரளவுக்கு சமகல்வி இருந்தது. மோசமான பொருளாதார மயம், உலகமயமாக்கல் வந்தபிறகு ஏற்றத்தாழ்வுகள் ஆரம்பித்துவிட்டன.
எந்த நாட்டிலும் கல்வி தனியாரிடம் இல்லை. பள்ளிகளை தனியார் நடத்தவில்லை. நமது நாட்டில் உச்சி முதல் அடி வரை காசு அடிப்படையில் கல்வி உள்ளது. அதிக காசு வாங்கினால் தரமான கல்வி என, நாம் நினைக்கிறோம். ஒவ்வொரு கட்டத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் குழந்தைகள் தகுதியற்றவர்களாக வெளியேற்றப்படுகின்றனர்.
நமது நாட்டில் ஆங்கில வழிக்கல்வி மோகம் மிகப்பெரிய சாபக்கேடாக உள்ளது. எந்த நாட்டிலும் வெளிநாட்டு மொழியில் அனைத்து பாடங்களையும் கற்றுத் தருவதில்லை. நாம் மட்டும் தான் ஆங்கில மொழியில் அனைத்து பாடங்களையும் கற்றுக் கொடுக்கிறோம். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய கல்விக் கொள்கை அமைய வேண்டும். ஆனால், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் புதிய கல்விக் கொள்கை தோற்றுப்போயுள்ளது” என்றார் அவர்.
முன்னதாக கல்லூரி முதல்வர் வி.தாமோதரன் வரவேற்றார். உதவி பேராசிரியை சசி பிரியா நன்றி கூறினார். தூத்துக்குடி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த சுமார் 150 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை நடைபெறும் நிறைவு விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசுகிறார்.