தமிழகம்

படுகொலைகளைத் தடுத்து நிறுத்துவது ஜெயலலிதாவின் கடமை: ஸ்டாலின்

செய்திப்பிரிவு

ரவுடிகளின் சாம்ராஜ்யத்தையும், நடந்து வரும் படுகொலைகளையும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டியது முதல்வர் ஜெயலலிதாவின் கடமை என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சரியாக உள்ளதா ?

முதல்வர் கோட்டையில் இருந்தாலோ அல்லது போயஸ் தோட்டத்தில் இருந்தாலோ அங்கு சென்று நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி இது. காரணம் அவர்தான் சட்டம்-ஒழுங்கை கையில் வைத்துள்ளார். அவர்தான் உள்துறை அமைச்சராகவும், காவல்துறையின் அமைச்சராகவும் உள்ளார். எனவே, அவரிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டும். நான் மட்டுமல்ல, தமிழகத்தில் இருக்கும் பல கட்சிகளின் தலைவர்களும் இதுபற்றி கேள்வி எழுப்பி வருகிறோம். ஏன் தலைவர் கருணாநிதி இன்றைக்கும் கூட தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பற்றி மிகவும் தெளிவாக கடிதம் எழுதி இருக்கின்றார். எனவே இந்த ரவுடிகளின் சாம்ராஜ்யத்தையும், நடந்து வரும் படுகொலைகளையும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. முதல்வர் ஜெயலலிதாவின் கடமை.

சென்னையில் மழை வெள்ளம் பாதிப்புகள் மீண்டும் வராமல் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என செய்திகள் வெளியாகி வருவது குறித்து உங்கள் கருத்து என்ன ?

நான் இதுபற்றி சட்டமன்றத்தில் கூட பேசியுள்ளேன். கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்டது போன்ற ஒரு நிலை மீண்டும் சென்னைக்கு வந்து விடக்கூடாது என்று சட்டமன்றத்தில் குறிப்பிட்டு உள்ளேன். அதற்கென ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது, அந்த நிதியில் இதுவரை என்னென்ன பணிகள் செய்து இருக்கிறார்கள் என்பது குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று சட்டமன்றத்தில் கேட்டு இருக்கிறேன். இதுவரை ஒரு பதிலும் வரவில்லை.

புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதில்லை என காவல்துறை மீது பரவலாக, தொடர்ச்சியாக குற்றச்சாட்டு உள்ளதே?

முதலில் காவல்துறையில் நிறைய காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. சட்டமன்றத்தில் கூட நான் இதுகுறித்து ஆதாரத்துடன் பேசியிருக்கிறேன். காவல்துறையில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான பணியிடங்களை இந்த அரசு நிரப்பவில்லை என்பது தான் இன்றைக்கு உள்ள சூழ்நிலை. தேர்தலுக்கு முன்பு இதனை நீதிமன்றம் கூட கண்டித்து, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளது. நீதிமன்றம் உத்திரவிட்டும் கூட இந்த அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தான் வேதனைக்குரிய ஒன்று.

SCROLL FOR NEXT