தமிழகம்

சுயதொழில் தொடங்க கடனுதவி பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள் சுயதொழில் தொடங்குவதற்காக கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் வெ. அன்புச் செல்வன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை மாவட்டத்தில் உள்ள ஐடிஐ, பட்டய படிப்பு, இளங்கலை அல்லது அதற்கு மேல் படித்த,தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள இளைஞர்கள் தமிழக அரசின் ‘புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்)’ என்ற புதிய திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட ஆட்சியர் தலை மையிலான தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்படுவோருக்கு ஒரு மாதம் பயிற்சி அளித்து, தொழில் தொடங்க திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.25 லட்சம்) வரை முதலீட்டு மானியமும் 3 சதவீத வட்டி மானியமும் வணிக வங்கிகள், தாய்கோ வங்கி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும்.

உற்பத்தி சார்ந்த தொழில்கள் மற்றும் சேவை தொழில்களை தொடங்க குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.1 கோடி வரை வழங்கப்படும். இந்த திட்டம் குறித்த விவரங் களை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் உள்ள மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ தொலைபேசி எண்: 044 22501620,21,22) வாயிலாகவோ தெரிந்து கொள்ளலாம்.

மேலும் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT