தூத்துக்குடி பகுதியில் நேற்று திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டது. 100 மீட்டர் தொலைவுக்கு தண்ணீர் கரையை நோக்கி முன்னேறி வந்ததால் கருவாடு களங்கள், 10 பைக்குகள் மூழ்கின.
பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களின் போது, தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதியில் மாற்றம் காணப்படும். வழக்கத்தை விட சில அடி தூரம் கடல் உள்வாங்கும் அல்லது அலைகளின் சீற்றம் அதிகரித்து, கரைப்பகுதியை நோக்கி தண்ணீர் முன்னேறி வரும்.கடந்த 3 மாதங்களாக இந்நிகழ்வு அதிகம் நடக்கிறது.
கடந்த மார்ச் 12-ம் தேதி பவுர்ணமி வந்ததை தொடர்ந்து, 14-ம் தேதி திருச்செந்தூர் பகுதியில் கடல் உள்வாங்கி காணப்பட்டது. மார்ச் 27-ம் தேதி அமாவாசை தினத்தின் போது தூத்துக்குடி சிலுவைப்பட்டி பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டு, கடல் நீர் 100 மீட்டர் தொலைவுக்கு வெளியே வந்தது. ஏப்ரல் 10-ம் தேதி பவுர்ணமி என்பதால் 9-ம் தேதி திருச்செந்தூர் பகுதியில் கடல் உள்வாங்கியது.
கடல் சீற்றம்
இந்நிலையில் நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமி தினம் என்பதால், தூத்துக்குடி அருகேயுள்ள ராஜபாளையம், சிலுவைப்பட்டி பகுதிகளில் கடல் சீற்றம் நேற்று அதிகரித்து காணப்பட்டது.
கடல்நீர் சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு கரையை தாண்டி முன்னேறி வந்தது. இதனால், அப்பகுதியில் உள்ள கருவாடு உலர் களங்கள் மற்றும் ஷெட்டுகள் தண்ணீரால் சூழப்பட்டன. இவற்றில் நிறுத்தப்பட்டிருந்த 10 மோட்டார் சைக்கிள்களும் மூழ்கின. மேலும் மொட்டை கோபுரம் பகுதியில் உள்ள தேவாலயத்தையும் கடல் நீர் சூழந்தது.
தூண்டில் வளைவு
இப்பகுதி மீனவர்கள் கூறும்போது, ‘‘அமாவாசை, பவுர்ணமி தினத்தை முன்னிட்டு கடல் சீற்றமாக இருப்பது வழக்கமான ஒன்று. ஆனால், தற்போது சற்று அதிகமாக உள்ளது. திரேஸ்புரம் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டதால், இப்பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கிறது. எனவே, ராஜபாளையம் பகுதியிலும் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். அல்லது திரேஸ்புரம் தூண்டில் வளைவை இங்கு வரை நீட்டிக்க வேண்டும்’’ என்றனர்.