தமிழகம்

அரசு ஆரம்ப பள்ளிகளில்கூட ஆங்கில வழி கல்வியை புகுத்துவதா?- தமிழக அரசுக்கு கருணாநிதி கண்டனம்

செய்திப்பிரிவு

தமிழ் வழிக் கல்வியை முன்னெடுத்துச் செல்லாமல் அரசு ஆரம்பப் பள்ளிகளிலும்கூட ஆங்கில வழிக் கல்வியை புகுத்துவதா என தமிழக அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது:

குழந்தைகளின் மன வளர்ச் சிக்கு சிறந்தது தாய்மொழி வழிக் கல்விதான். வேறெந்த மொழியை யும் மாணவர்கள் மீது சுமத்துவது தாய்நாட்டுக்கு செய்யும் பாவம் என காந்தியடிகளே அறி வுறுத்தியுள்ளார். திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் தாய்மொழிக் கல்வியின் முதன்மைக்காக பாடுபட்டது.

வல்லரசு நாடுகளில் ஆங்கில ஆதிக்கத்துக்கு அடிபணியாமல், தாய்மொழியிலேயே கல்வியை வழங்கி வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் மருத்துவம் கற்கும் மாணவர்கள் இனி, ஆங்கிலத்தில் படிக்கத் தேவையில்லை. மருத்துவ நூல்களை பஞ்சாபி மொழியிலே மொழி மாற்றம் செய்ய அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பாபா பரீத் பல்கலைக்கழகத்தின் சுகாதார அறிவியல் துறை, மருத்துவ நூல்களை தங்களது தாய்மொழியிலேயே மொழி பெயர்க்கும் பணியில் இறங்கிவிட்டது.

இந்த முடிவுகளை தமிழக அரசும் எடுக்க வேண்டும். திமுக அரசு பொறுப்பில் இருந்தபோது, 2010-ல் கட்டுமானவியல், இயந்திரவியல் ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகள் தாய்மொழியில் கற்க வகை செய்யப்பட்டது. அந்த ஆண்டில் 1,378 பேர் தமிழ் மொழியில் படித்தனர். திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால், அதற்கும் தடை ஏற்படுத்தப்பட்டது.

திமுக 5-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதும் 1 முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் மொழிக் கல்வி கட்டாயம் என்று 2006-ல் சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தப்பட்டது. 10, 12-ம் வகுப்புகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழி பயிலும் மாணவர்கள் பொதுத் தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிப்பட்டதால் ஆண்டுதோறும் ஏறத்தாழ 10 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். இப்படி தமிழ் வழிக் கல்வியை ஒவ்வொரு கட்டமாக கொண்டுசென்று வளர்த்தெடுக்கும் பணி திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.

தமிழ் வழிக் கல்வியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லாமல், அரசு ஆரம்பப் பள்ளிகளிலும்கூட, ஆங்கில வழிக் கல்வியை புகுத்தத் துணிந்திருக்கும் அதிமுக அரசு, தமிழ் வழிக் கல்வியை ஆதரித்து ஊக்கப்படுத்தப் போதில்லை.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

சச்சின் சுயசரிதையை ஆர்வமாக படிக்கும் கருணாநிதி

சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதையை ஆர்வமாக படித்து வருவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், அண்மையில் எழுதி வெளியிட்ட அவரது சுயசரிதை நூலான ‘பிளேயிங் இட் மை வே’ கிடைக்கப் பெற்றேன். கிரிக்கெட்டில் சாதனைகள் பல புரிந்தபோதும் அமைதியின் உருவமாய், ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி அடக்கத்துடன் அவர் பதிலளிக்கும் பாங்கும் அந்தப் பண்பாடும்கூட, அவர் பெரும் புகழ்பெறக் காரணங்களாக அமைந்தன என்றால், அது மிகையல்ல.

எந்நாளிலும் எனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய சச்சினின் சுயசரிதை நூலை ஆர்வத்துடன் படித்து வருகிறேன்.

இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT