தமிழகம்

ராம்கோ குழுமங்களின் தலைவர் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா உடல் தகனம்: அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் அஞ்சலி

செய்திப்பிரிவு

உடல்நலக் குறைவால் காலமான ராம்கோ குழுமங்களின் தலைவர் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா(83) உடல் நேற்று தகனம் செய்யப் பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

ராம்கோ குழுமங்களின் தலை வரும் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத் தலைவருமான பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ராஜபாளையம், தென்காசி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் மாலை அவர் காலமானார்.

அதையடுத்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் ராஜபாளையம் நகரில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டன. தமிழக அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநிலத் தலைவர் கதிரவன், ஐஎன்டியுசி தொழிற்சங்க மாநிலத் தலைவர் காளையன், அரசு கொறடா தாமரை ராஜேந்திரன், பாஜக சார்பில் இல.கணேசன் எம்பி, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் தொழில் அதிபர்கள், ராம்கோ குழுமத் தொழிலாளர்கள், ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அவரது உடல் இல்லத்தில் இருந்து ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டு பி.ஏ.சி.எம். பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தகனம் செய்யப்பட்டது. அப்போது அங்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

SCROLL FOR NEXT