தமிழகத்தின் உள் மாவட்டங்களான வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் 111 டிகிரி வரை இன்று வெயில் பதிவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது தென்-மேற்கு திசையில் வீசும் காற்றின் வேகம் காரணமாக உள் மாவட்டங்களில் வெயில் அதிகரித்துள்ளது. இந்த காற்று காரணமாக கிழக்கு திசையில் இருந்து வீச வேண்டிய ஈரப்பதம் கொண்ட காற்று வீசவில்லை. இதனால் நிலமும் வெப்பமடைந்துள்ளது. தென்-மேற்கு திசையில் இருந்து வீசும் காற்று குறைந்து, கிழக்கில் இருந்து காற்று வீசினால், நிலம் குளிர்ச்சியடையும். மேலும் மேகங்கள் திரண்டு சில இடங்களில் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
தற்போதைய நிலையில் வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 108 டிகிரி முதல் 111 டிகிரி வரை வெயில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று மாலை 5.30 மணி வரையிலான நிலவரப்படி தமிழ கத்தில் அதிகபட்சமாக திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய இடங்களில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. அதேபோல கரூர், பரமத்தி, மதுரையில் 106 டிகிரி, பாளையங்கோட்டையில் 105 டிகிரி, திருப்பத்தூரில் 104 டிகிரி, சேலத்தில் 103 டிகிரி, தருமபுரியில் 101 டிகிரி வெயில் பதிவானது. சென்னையில் 99 டிகிரி, கோவையில் 98 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியிருந்தது.