தமிழகம்

சாலையோரத்தில் போதை சாக்லெட்டுகள்?- கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை

செய்திப்பிரிவு

கோவையில் சாலையோரத்தில் பெட்டி பெட்டியாக கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ள சாக்லெட்டுகள் குறித்து, உணவு தரக்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை உக்கடம் பெரிய குளத்தை ஒட்டியவாறு செல்லும் செல்வபுரம் சாலையின் ஓரத்தில் சாக்லெட்டுகள் பெட்டிகளில் அடைக்கப்பட்டு கொட்டப்பட்டிருப் பதை அப்பகுதி மக்கள் நேற்று பகலில் பார்த்தனர். மூன்று வகையான சாக்லெட்டுகள் கிடப்பதை அறிந்த பொதுமக்களில் சிலர் அதனை எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில், திடீரென சாக்லெட்டுகள் கொட்டப்பட்டுக் கிடந்ததால் அது போதை தரும் சாக்லெட்டுகளாக இருக்கலாம் என தகவல் பரவியது. சமீபத்தில் சென்னையில் போதை தரும் சாக்லெட்டுகளை பல்வேறு கடைகளில் பறிமுதல் செய்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும், போலீஸாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மொத்த விற்பனைக் கடைகளில் உணவு தரக்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இது குறித்து உணவுப் பாதுகாப்பு துறை ஆய்வாளர் பழனிசாமி கூறும்போது, "சாலையில் கொட்டப்பட்ட சாக்லெட்டுகள் குறித்து விசாரணை செய்யப்பட்டது. ஆனால், அந்த சாக்லெட் மாதிரிகளை பரிசோதனைக் கூடத்துக்கு எடுத்துச் சென்று சோதனை செய்ய முடியாது. போதை தரும் சாக்லெட்டாக இருந்தாலும் அது கடையில் வைத்து விற்றால்தான் குற்றம். அதனை அழிப்பதற்காக இவ்வாறு கொட்டிச் சென்றால் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது. காரணம், கொட்டியவர்கள் யார் என்பது தெரியாது" என்றார்.

இந்நிலையில், சாலையில் கொட்டப்பட்டிருந்த சாக்லெட்டு களை பொதுமக்கள் சிலர் அள்ளிச் சென்றதால் அது மீண்டும் சிறு கடைகளுக்கு விற்பனைக்கு வரலாம் என சந்தேகம் எழுந்துள் ளது. அதுபோன்ற சாக்லெட்டுகள் மீண்டும் விற்பனைக்கு வராமல் தடுக்க உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சிறு கடைகளிலும் ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

SCROLL FOR NEXT