சாலை விபத்தில் பலியான பாடகர் திருவுடையான் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தின் மீதான அக்கறை, தமிழ் மீதான காதல், ஒடுக்கப்பட்டோருக்காக எழுந்த கலகக் குரல் என்று பல்வேறு தளங்களில் தொடர்ந்து இயங்கிவந்த பாடகர் திருவுடையான், சாலை விபத்தில் திங்கள்கிழமை மறைந்தார்.
இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் முன்னணி இசைக்கலைஞரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளருமான சங்கரன் கோவில் திருவுடையான், தனது 48 ஆவது வயதில் 29.08.2016 அதிகாலையில் சாலைவிபத்தில் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.
கலைக்களத்தில் இடைவிடாது இசைத்தும், பாடியும் பகுத்தறிவுச் சிந்தனை வளர்த்த ஏழை திருவுடையான் கைத்தறி நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர்.
இவரது நல்லகுரல் வளத்தில் உழைக்கும் மக்களின் பிரச்சனைகளை பாடலாக கேட்போர் முற்போக்குப் பாதையில் அணிவகுக்கும் திசைவழியை தேர்வு செய்வார்கள்.
பன்முகஆற்றல் கொண்ட கலைஞரை இழந்து தவிக்கும் திருவுடையானின் குடும்பத்தாருக்கும், களப்போராளிளை இழந்துள்ள முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞரின் சங்கத்தினருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.