புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென ஆட்சியரிடம் கிராம மக்கள் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.
முன்னாள் எம்எல்ஏ எஸ். ராஜசேகரன் தலைமையில் நெடுவாசல் கிராம மக்கள் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சு.கணேஷிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கல்லணை கால்வாய் மற்றும் ஆழ்துளை கிணறு மூலம் பாசன வசதி கொண்ட நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தை ஒப்பந்தம் முறையில் தேர்வு செய்த மத்திய அரசு, 15 ஆண்டுகள் எரிவாயு எடுப்பதற்கு அந்நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது. எரிவாயு எடுத்தால் இப்பகுதியில் நீர், நில வளம் பாதிக்கப்படும். எனவே, எரிவாயு எடுக்க மத்திய அரசு அளித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதில், முன்னாள் எம்.பி.ராஜாபரமசிவம், முன்னாள் எம்எல்ஏக்கள் டி. புஷ்பராஜ், எஸ்.சி.சாமிநாதன், மாவட்டச் செயலாளர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி த.செங்கோடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எஸ்.கவிவர்மன், இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜி.எஸ்.தனபதி, நெடுவாசல் முன்னாள் ஊராட்சித் தலைவர் கே.தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண் டனர்.
இது குறித்து எஸ்.ராஜசேகரன் ‘தி இந்து’விடம் கூறியது:
இந்தப் பகுதியில் எரிவாயு எடுப்பதன் மூலம் நிலத்தடி நீரோடு, விவசாயமும் பாதிக்கப்படும். கடந்த 2013-ம் ஆண்டு அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் பரிந்துரைப்படி தமிழகத்தில் மீத்தேன் உள்ளிட்ட எரிவாயு எடுக்க மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தடை விதித்துள்ளார். எனவே, இந்த உத்தரவின் அடிப்படையில் நெடுவாசலில் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
இதுகுறித்து உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறியது:
நெடுவாசலில் எரிவாயு எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தி உரிமை மீட்புக் குழுவின் மூலம் புதுக்கோட்டை திலகர் திடலில் பிப்ரவரி 26-ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து எரிவாயுவால் ஏற்படும் தீமைகள் குறித்து மார்ச் மாதத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்டம் முழுவதும் சைக்கிள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.