தமிழகத்தில் ஜூலை இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க கால அவகாசம் வழங்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை மே 14-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக் கையை சந்திக்க நேரிடும் என்று மாநில தேர்தல் ஆணையத்தை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் டி.எஸ்.ராஜசேகர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 12,528 ஊராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலுக்காக புதிய வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டியுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் இருந்து தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியலைப் பெற்று, அதில் வார்டு வாரியாக வாக்காளர்களை சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
ஏற்கெனவே உள்ள சட்டப் பேரவை தொகுதிவாரியான வாக்காளர் பட்டியலையும், புதிதாக தயாரிக்கப்படும் உள்ளாட்சி வாக்காளர் பட்டியலையும் ஒப்பிட்டுப் பார்த்து, அதன்பிறகு வாக்குச்சாவடி மையங்களையும், வாக்காளர் பட்டியலையும் இறுதி செய்ய குறைந்தபட்சம் 95 நாட்கள் தேவை. கடந்த ஜனவரி 23 முதல் பல்வேறு தேதிகளில் 41 நாட்களாக இப்பணி நடந்து முடிந்துள்ளது. இன்னும் 54 நாட்கள் தேவை.
கிராமப்புறங்களில் இணை யதள சேவை மோசமான நிலையில் உள்ளது. ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்களும் திடீர் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதனால் பணியை விரைந்து முடிக்க முடியவில்லை. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுப்படி அனைத்து நடவடிக் கைகளையும் மாநில தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.
மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்குள் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லாத ஒன்று. எனவே, ஜூலை இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க போது மான அவகாசம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.