படகு சவாரிகளில் செல்லும்போது, உயிரிழப்புகளைத் தவிர்க்கப் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
''தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு என்ற சுற்றுலாத்தலத்திற்கு அழகம்மன்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர்களும், அங்கு நடந்த கோவில் திருவிழாவிற்கு வந்த திருச்சியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலரும் சென்ற படகு கடலில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பரிதாபமாக பலியான செய்தி அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிப்பதாக உள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு என் சார்பாகவும், சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தித்துக்கொள்கிறேன்.
இதுபோன்ற படகு சவாரிகளில் செல்லும்போது, உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கு தகுந்த பாதுகாப்பு கவசங்களைக் கண்டிப்பாக அணிந்து செல்வதற்கும், நன்கு நீச்சல் தெரிந்தவர்களை கூடுதலாக நியமிக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.