விழுப்புரம் மாவட்டத்தில் திமுக, மதிமுக, தேமுதிக, பாமக, தீபா பேரவை உள்ளிட்ட அரசியல் அமைப்புகள் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள், திருமண வாழ்த்து, பிறந்த நாள் வாழ்த்து என அனுமதி பெறாமல் பொது இடத்தில் பேனர் வைத்தவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் மீது அந்தந்த பகுதி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதில், வானூர் அருகே குயிலாப்பாளையம் சக்தி கோயில் செல்லும் வழியில் அதிமுக தொண்டரான கோவிந்தராஜ் என்பவர் அனுமதியின்றி வைத்த பேனரில் ஜெயலலிதா படத்தை மட்டும் வைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதுகுறித்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மண்ணாங்கட்டி கொடுத்த புகாரின் பேரில் கோவிந்தராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் மாவட்டம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, துணை பொதுச் செயலாளர் தினகரன் உள்ளிட்டோரின் படத்துடன் பேனர் வைத்தவர்கள் மீது எந்த ஒரு வழக்கும் போலீஸாரால் பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில் திருவெண்ணைநல்லூரில் தீபா பேரவையினர் வைத்த பேனரை போலீஸார் அகற்றியதை கண்டித்து நேற்று பேரவை நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
பேனர் வைக்க யாரிடம் அனுமதி பெற வேண்டும் என வருவாய்த்துறை வட்டாரங்களில் கேட்டபோது: கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்த பின்பு அது வருவாய்துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சித்துறைக்கு அனுப்பப்படும். உள்ளாட்சித் துறையில் பேனர் அளவுக்கு குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்படும். கட்டணம் செலுத்திய ரசீதை வருவாய்துறையிடம் சமர்பிக்க வேண்டும். அதன் நகலை காவல்துறையிடம் கொடுத்து அனுமதியும், கால அவகாசமும் பெற்று அதை விண்ணப்பிப்பவர் சொந்த செலவில் அகற்ற வேண்டும்.
ஆனால் இந்த நடைமுறைகளை யாரும் பின்பற்றுவதில்லை. போலீஸார் வழக்குப்பதிவு செய்தால் 6 மாத கால தண்டனை அல்லது அபராதம் என்றே நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது அபராதம் செலுத்தி கொள்ளலாம் என்று தைரியமாக பேனர்களை வைக்கிறார்கள் என்றனர்.