சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டிக்கு ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப்போட்டி தமிழ் வளர்ச்சி்த் துறையால் நடத்தப்படுகிறது. இப் போட்டிக்கு கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல், டிசம்பர் 31-ம் தேதி வரை வெளியிடப்பட்ட நூல்கள் 33 வகைப்பாடுகளின் கீழ் வரவேற்கப்படுகின்றன. போட்டியில் ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஒரு நூல் மட்டுமே தேர்வு செய்யப்படும். அந்த நூலின் ஆசிரியருக்கு ரூ.30ஆயிரம், பதிப்பகத்தாருக்கு ரூ.10 ஆயிரம் என பரிசுகள் வழங்கப்படும். பரிசுப் போட்டிக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை, தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல்தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை- 600008 என்ற முகவரியில் நேரிலோ, அஞ்சல் வாயிலாகவோ பெறலாம். மேலும், ‘www.tamilvalarchithurai.org’ என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.
அஞ்சலில் பெற விரும்புவோர், 23-க்கு 10 செ.மீ அளவிலான சுய முகவரியிட்ட உறையில் ரூ.10 தபால் தலை ஒட்டி அனுப்ப வேண்டும். போட்டிக்கான விண்ணப்பத் துடன் 10 நூல் படிகள், போட்டிக் கட்டணம் ரூ.100 வங்கிக் கேட்பு காசோலையாக ‘தமிழ்வளர்ச்சி இயக்குநர், சென்னை’ என்ற பெயரிலோ அல்லது அலுவலகத்தில் நேரிலோ செலுத்தி அதற்கான செலுத்துச் சீட்டுடன் அளிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.