‘நெருக்கடி வருகிறபோது உதவிக்கரம் நீட்டுகிறவர்கள்தான் உண்மையான நண்பர்கள். என் நண்பர்களை நான் முழுமையாக நம்புகிறேன்’ என ஈரோட்டில் நடந்த அரசு விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
ஈரோட்டில் ரூ.692 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: மணல் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில், மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தி வருகிறது. மணல் விலை உயர்வு பிரச்சினை இன்னும் ஒரு வார காலத்துக்குள் சீர் செய்யப்பட்டு, குறைந்த விலையில் பொதுமக்களுக்குத் தேவையான மணல் கிடைக்கும்.
என் கல்லூரி நாட்களில் எனக்குக் கிடைத்த நண்பர்கள் எல்லாம் உண்மையானவர்களாகவும், நம்பிக்கைக்கு உரியவர்களாகவும், உள்ளன்பு மிக்கவர்களாகவும் இருந்தனர். அப்படிப்பட்ட நட்பும் நம்பிக்கையும் தான் எதிர்காலத்தில் எனது பொது வாழ்க்கைக்கு பலமாக இருந்தது.
ஒருவன் தன் ஊரை அடைய காட்டு வழியே சென்றான். அவனைப்போல இன்னொருவன் தனியாக வந்து கொண்டிருந்தான். இரண்டு பேரும் ஒருவருக்கு ஒருவர் துணையாக காட்டைக் கடந்து விடலாம் என்று நடக்க ஆரம் பித்தார்கள். இந்த நேரத்தில் கரடி ஒன்று வந்தது. ஒருவன் ஓடிப்போய் மரத்தில் ஏறிக்கொண்டான். மற்ற வன் மூச்சை தம் கட்டிக் கொண்டு கிடந்தான். அவன் இறந்துவிட்டதாக நினைத்து கரடி சென்றுவிட்டது. மரத்தில் இருந்து இறங்கியவன், கீழே கிடந்தவனிடம் “கரடி ஏதோ கூறியதே, அது என்ன?” என்று கேட்டான். ‘உன்னை மாதிரி நம் பிக்கை துரோகிகளிடம் இனிமேல் நட்பு வைத்துக் கொள்ளக்கூடாது’ என்று கரடி சொன்னதாக அவன் கூறினான்.
நம்பிக்கை வீண் போகாது
நெருக்கடி வருகிறபோது உத விக்கரம் நீட்டுகிறவர்கள்தான் உண்மையான நண்பர்கள். என் நண்பர்களை நான் முழுமையாக நம்புகிறேன். அந்த நம்பிக்கைதான் என்னை இந்த அளவுக்கு உயர்த் தியிருக்கிறது என்று முதல்வர் பேசினார்.
முன்னதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் பேசும்போது, ‘இந்த அரசு 115 நாட்களில், நாட்டின் அனைத்து மாநிலங்களும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு சரித்திர சாதனை படைத்து வருகிறது. இந்த அரசை எவராலும் அசைக்க முடியாது. 5 ஆண்டு காலம் மட்டு மல்ல, 50 ஆண்டுகாலம் இந்த அரசு நடக்கும்’ என்றார்.
ஈரோட்டில் நடந்த அரசு விழாவில் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
தோப்பு வெங்கடாசலம் புறக்கணிப்பு
ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடந்த அரசு விழாவில், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. தோப்பு என்.டி.வெங்கடாசலம் பங்கேற்காமல் புறக்கணித்தார். அதிமுக (அம்மா அணி) துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை சமீபத்தில் சந்தித்து ஆதரவு அளித்த தோப்பு வெங்கடாசலம், கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் பங்கேற்ற தனியார் கல்லூரி விழாவிலும் பங்கேற்கவில்லை.
விழாவில் முதல்வர் பேசும்போது, ஈரோடு எம்.எல்.ஏ.க்கள் பெயரை வரிசையாக குறிப்பிட்டார். அப்போது தோப்பு வெங்கடாசலம் பெயரை குறிப்பிடாததோடு, ‘யார் பெயரையாவது விட்டுட்டேனா’ என்று மேடையில் இருந்தவர்களிடம் கேட்டது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்த முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. ரமணிதரன் ஆகியோர் நேற்று முதல்வரை சந்தித்தனர்.