மதுரையில் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை 2 ஆகப் பிரித்து நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வரும் நாட்களில் மேல்முறையீடு விசாரணையை தாமதிக்க மாட்டோம் என குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
மதுரையில் நாளிதழ் அலுவலகத் தில் கடந்த 9.5.2007-ல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் ஊழியர்கள் வினோத், கோபிநாத், பாதுகாவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அட்டாக் பாண்டி உட்பட 17 பேரை சிபிஐ கைது செய்தது. இவர்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 9.12.2009-ல் விடுதலை செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ மேல் முறையீடு செய்துள்ளது.
இந்த மேல் முறையீட்டு வழக் கின் விசாரணையை இழுத்தடித்து வந்ததால் அட்டாக் பாண்டியின் கூட்டாளிகளான திருச்செல்வம், சரவணமுத்து, முருகன் என்ற சொரி முருகன், கந்தசாமி, ரமேஷ்பாண்டி, ராமைய்யா பாண்டியன், வழிவிட்டான், தயாமுத்து, சுதாகர், திருமுருகன் என்ற காட்டுவாசி முருகன், ரூபன், மாலிக் பாட்சா ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இவர்களில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.கோகுல்தாஸ் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. சரவண முத்து உட்பட 9 பேரை போலீஸார் ஆஜர்படுத்தினர். திருச்செல்வம் சரண் அடைந்தார். சரவணமுத்து, முருகன் என்ற சொரி முருகன், சுதாகர் ஆகியோருக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த 3 பேருக்கும் ஜாமீன் வழங்கிய நீதிபதிகள், அவர்கள் தினமும் காலையில் மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்தனர். நீதிமன்றத்தில் சரணடைந்த திருச்செல்வத்துக்கு எதிரான பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டது.
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 12 பேரில் தயாமுத்து, திருமுருகன் என்ற காட்டுவாசி முருகன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என சிபிஐ வழக்கறிஞர் நாகேந்திரன் தெரிவித்தார். அப்போது தலைமறைவாக உள்ள இருவர் மீதான வழக்குகளை தனியாகப் பிரித்தும், மற்றவர்கள் மீதான வழக்கை தனியாகவும் விசாரிக்கலாம், அதற்காக சிபிஐ தனி மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் 6 பேர் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. அவர்கள் வழக்கறிஞர்களை வைத்துக் கொள்வதாகவும், வழக்கை இனிமேல் தாமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தனர். இதை நீதிபதிகள் பதிவு செய்துகொண்டனர். பின்னர் விசாரணையை ஜூலை 13-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.