கோஷ்டி மோதலில் ஈடுபடுவோர் மற்றும் போராட்டம் நடத்தும் தமிழர் அமைப்பினரை கண்டறியும் வகையில் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸுக்கு எதிராக தமிழர் அமைப்புகள் அடிக்கடி போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழக காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிடவும் முயல்கின்றனர். சமீபத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலைக்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், நாம் தமிழர் கட்சியினரும் தமிழர் அமைப்பினரும் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. கல்வீச்சில் போலீஸ்காரர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகி உள்பட 8 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இயக்கத்தினரை அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறினர்.
அதற்கு சில நாட்களுக்கு முன்பு பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை டீ வியாபாரி என்று கூறிய மணிசங்கர் அய்யரைக் கண்டித்து பாஜகவினரும் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு டீ விற்கும் போராட்டம் நடத்தினர். அதுமட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியினரிடையே அவ்வப்போது கோஷ்டி மோதல்களும் நடக்கின்றன. கடந்த வாரத்தில் தென்காசி மற்றும் சிதம்பரம் தொகுதி வேட்பாளர்களை மாற்றக் கோரி காங்கிரஸார் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.