தமிழகம்

வெவ்வேறு இடங்களில் கடலில் மூழ்கி 4 பேர் பலி

செய்திப்பிரிவு

பெசன்ட் நகர், திருவான்மியூர், முட்டுக்காடு ஆகிய பகுதிகளில் கடலில் மூழ்கி 4 பேர் இறந்து விட்டனர்.

சென்னை தரமணியில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் காவலாளியாக இருந்தவர் கல்யாண்(29). இவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். நேற்று முன்தினம் மாலையில் கல்யாண் மற்றும் அவரது நண்பர்கள் பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்தனர். பின்னர் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது அலையில் சிக்கிய கல்யாண் நீரில் மூழ்கிவிட்டார். அவரது நண்பர்கள் சிறிது நேரத்திலேயே கல்யாணை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத் தில் வேலை பார்த்த வேளச்சேரியை சேர்ந்த வினோத்(24), தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் மாலையில் பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்தார். வினோத் மற்றும் நண்பர்கள் கடல் அலையில் விளையாட, அலையில் சிக்கிய வினோத் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார்.

நேற்று முன்தினம் மாலையில் திருவான்மியூர் கடற்கரையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடலும், முட்டுக்காடு கடற்கரை பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் உடலும் கரை ஒதுங்கிக் கிடந்தன. இவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை.

நேற்று முன்தினம் ஒரே நாளில் 4 பேர் கடலில் மூழ்கி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT